விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்


விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 7:02 PM GMT)

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் என இஸ்ரோ துணை இயக்குனர் ரங்கநாதன் கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணம் அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் உலக விண்வெளி வார விழா நடந்தது. கும்பகோணம் இஸ்ரோ கோட்ட தலைவர் ராம்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் அறிமுகவுரையாற்றினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., அரசு கல்வி குழும தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ துணை இயக்குனர் ரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

விண்வெளி ஆய்வு என்பது சாதாரண அன்றாட மனித வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்ற தவறான கருத்து மக்களிடம் நிலவி வருகிறது. அது அப்படியல்ல. கடலில் சென்று மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களின் உடல் வெப்பத்தை கூட துல்லியமாக விண்வெளி செயல்பாடுகளின் மூலம் அறியமுடியும். கடலின் எந்த பகுதியில் மீன் வளம் குவிந்துள்ளது என்பதையும் அவர்களுக்கு தெரிவிக்க முடியும்.

நாட்டின் பயிர் வளம் எப்படி உள்ளது? எந்த பகுதியில் எந்த தானியம் எவ்வளவு மகசூல் அளிக்கும்? என்பதை கூட கணித்து அரசுக்கு முன் கூட்டியே தெரியப்படுத்த முடியும். இப்படியாக பல்வேறு துறைகளுக்கும், எல்லையில்லா சேவை புரிவது தான் விண்வெளி ஆய்வு மையத்தின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, விண்வெளி வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கும்பகோணம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மட்டும் விண்வெளி கண்காட்சி நடைபெறுகிறது.

இஸ்ரோவின் அடுத்த திட்டம் ‘ககன்யான்’. இதை பிரதமர் 2022-ல் நிறைவேற்ற கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். 2 அல்லது 3 நபர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பூமியை சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும் வகையில் ராக்கெட் வடிவமைக்கப்பட்டு விரைவில் விண்ணில் ஏவப்படும்.

இதனால் உலக அளவில் அனைத்து விதமான தகவல்களை தெரிவிக்கவும், உள்நாட்டில் காடு வளம், கடலில் மீன் பெருக்கம், நாட்டின் வளம், நகரமைப்பு, எல்லை ஊடுருவல், கடல் ஊடுருவல் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பெறவும் முடியும்.

இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும். இதனால் இந்தியா பெருமைப்படும். மேலும், சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டதால், இந்தியாவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story