நல்லாட்சி தரும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு


நல்லாட்சி தரும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 8:29 PM GMT)

நல்லாட்சி தரும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

விழுப்புரம், 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூரிகுடிசை கிராமத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இப்பகுதியில் பனை ஏறும் தொழில் புரிவோர் அதிகளவில் வசிக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு, புதிய கூட்டுறவு தொழில் கூட்டமைப்பை ஏற்படுத்த உள்ளது. இதன் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி உதவி கிடைக்கும். பனை சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான திறன் வளர்ப்பு பயிற்சியும் வழங்கி வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும். எனவே நல்லாட்சி தரும் அ.தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலிலும் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் அமைச்சர் பாண்டியராஜன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.விடம் இருந்து ரூ.25 கோடி அளவில் தேர்தல் நிதி பெற்ற விவகாரத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் மீது மக்களிடம் இருந்த நல்ல அபிப்பிராயம் போய்விட்டது. அவர்கள் மீதான நீண்டகால பாரம்பரியம் என்ற பிம்பம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியான தி.மு.க., காட்டிக்கொடுக்கும் விதத்தில் இதை செய்துள்ளது. நம்பிக்கையானவர்கள் யார் என்பதை கம்யூனிஸ்டுகள் உணர்வார்கள்.

தமிழகத்தில் தி.மு.க.வினரை நம்பி கெட்டவர்கள் அதிகம், அ.தி.மு.க.வை நம்பி வாழ்ந்தவர்கள் அதிகம். இதன் காரணமாக இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள், எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என தெரிகிறது என்றார்.

Next Story