பெரம்பலூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடுகளில் 8 பவுன் நகை- ரூ.3 லட்சம் திருட்டு
பெரம்பலூரில் அரசு பள்ளி ஆசிரியர்களின் வீடுகளில் மொத்தம் 8 பவுன் நகை-ரூ.3 லட்சம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் வடபுறம் உள்ள எம்.எம்.நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 54). இவர் அனுக்கூரில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜூலிமார்க்ரேட்(48) உடும்பியம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு வின்னேயல்(24) என்கிற மகனும், வின்ஸ்லெட்(21) என்கிற மகளும் உள்ளனர். வின்னேயல் கல்லூரி படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். வின்ஸ்லெட் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் செல்வகுமாரின் மகன் வேலை தேடிதிருச்சிக்கும், மகள் கல்லூரிக்கும், மனைவி பள்ளிக்கும் சென்று விட்டனர். இதையடுத்து செல்வகுமார் வீட்டை பூட்டி விட்டு சாவியை மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு தெரியும் வழக்கமாக வீட்டின் வெளியே வைக்கும் ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பணிமுடிந்து சீக்கிரமாகவே செல்வகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறைகளில் இருந்த ரூ.2¾ லட்சமும், 3 பவுன் நகையும் திருடு போயிருந்தது. செல்வகுமார் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை வைக்கும் இடத்தை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் ராபர்ட்(43). இவர் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா(42) களரம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கணவன்- மனைவி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். கவிதா பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்து 5 பவுன் நகையும், ரூ.33 ஆயிரமும் திருடு போயிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த 2 திருட்டு சம்பவம் தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னதாக நேற்று பட்டப்பகலில் புதிய பஸ் நிலையம் அருகே எஸ்.கே.சி. நகர் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். எனவே அந்த மர்மநபர்கள் தான் இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story