ரங்கசாமி அரசியலை வியாபாரமாக நடத்துகிறார் - வைத்திலிங்கம் குற்றச்சாட்டு


ரங்கசாமி அரசியலை வியாபாரமாக நடத்துகிறார் - வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

அரசியலை வியாபாரம் போன்று ரங்கசாமி நடத்துகிறார் என்று வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வாக்குசேகரிக்க வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனெனில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழை காரணமாக கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், வெங்கடேஸ்வரா நகர், சாமிப்பிள்ளைதோட்டம் பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வசிப்பவர்களுக்கு உணவுகூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. முதியோர் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர்.

அந்த பாதிப்பினை அப்போது முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமி ஒரு நிமிடம் கூட வந்து பார்த்தது இல்லை. அவர்களுடைய உள்ளக்குமுறலை கேட்டது கிடையாது. குடிநீருக்கு அவதிப்பட்டபோது கூட உதவி செய்ய நினைத்தது கிடையாது. மக்களெல்லாம் முதல்-அமைச்சர் நம்மை வந்து பார்ப்பாரா? என்ற ஆதங்கத்துடன் இருந்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரங்கசாமி வீடு வீடாக வருகிறார். அப்போது செய்த தவறுக்கு இப்போது பிராயசித்தம் தேடுகிறார். என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடவில்லை என்றால் இந்த வாய்ப்பு மக்களுக்கு கிடைத்திருக்காது. அதற்காக என் வாழ்த்துக்களை ரங்கசாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இப்போதாவது மக்களை பார்க்கவேண்டும், அவர்களது குறைகளை கேட்கவேண்டும் என்று செயல்படுகின்றாரே?

அவரது வேட்பாளருக்கு போதிய அரசியல் அனுபவம் கிடையாது. அவரை ஏன் வேட்பாளராக நிறுத்தினார்? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. நேருவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் காரணத்தையும் அவர்கள் விளக்கவில்லை. அ.தி.மு.க.விற்கான தொகுதியை ஏன் வாங்கினார்கள் என்ற கேள்வியும் உள்ளது. அ.தி.மு.க. சார்பில் முன்பு போட்டியிட்டவர் மக்களிடம் சிறந்த முறையில் பழகக்கூடியவர்.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் நிறுத்திய வேட்பாளர் வெற்றிபெற்றார். அவரை செயல்பட விடாமல் தடுத்து நிறுத்திவிட்டு செயல்படாதவர் என்ற பட்டத்தை கொடுத்து வெளியே அனுப்பினார்கள். இப்போது அதே சமுதாயத்தினரிடம் ஆதரவை கேட்கின்றனர்.

மேல்சபை எம்.பி. தேர்தலில் பெரும்பான்மை இருந்தும் தங்கள் கட்சியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு தராமல் அ.தி.மு.க.வுக்கு கொடுத்தனர். உரிய வேட்பாளரையும் தங்கள் கட்சியிலிருந்தே தந்தனர். அவர்கள் தேர்வு செய்த எம்.பி.யினால் இந்த மாநிலத்திற்கு கிடைத்த நன்மை என்ன? நாடாளுமன்ற தேர்தலில் இளம் டாக்டர் ஒருவரை நிறுத்தினர். அவர் என்ன சாதனை செய்தவர்? எந்த குறிக்கோளும் இல்லாமல் கட்சிக்கும், மக்களுக்கும் நன்மை செய்யாமல் இருப்பவர்தான் ரங்கசாமி.

தட்டாஞ்சாவடி தொகுதியில் தனக்கு வேண்டியவரை நிறுத்தினார். அவருடைய எண்ணங்கள் எல்லாம் வசதிபடைத்தவர்கள், பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருவதுதான். அவர் அரசியலை வியபாரமாக நடத்துகிறார். அ.தி.மு.க.வின் கட்டுப்பாட்டில்தான் என்.ஆர்.காங்கிரஸ் உள்ளது. இப்போதும் அன்பழகன் எம்.எல்.ஏ.வின் பின்னால்தான் ரங்கசாமி செல்கிறார். அவரால் தனியாக செயல்பட முடியாது.

இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.

Next Story