போலி சான்றிதழ் தயாரித்து ஆசிரியராக பணியாற்றிய பெண் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை
போலி சான்றிதழ் தயாரித்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பெண் உள்பட 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் புனிதவதி (வயது 35). அதேபோல் வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகாவை சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர்கள் இருவரும் செய்யாறு அருகே உள்ள மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயர்நிலை பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ஆசிரியராக பணியாற்றி வந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளியில் அப்போது திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது புனிதவதி மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி விட்டு தேர்ச்சி பெறாமல் போலியான சான்றிதழ் தயாரித்து ஆசிரியராக பணியாற்றியது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். பின்னர் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புனிதவதி, விஜயகுமார் ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்து பணியாற்றியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்.1 கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேடு விக்னேஷ்பிரபு போலி சான்றிதழ் தயாரித்து பணியாற்றிய குற்றத்திற்காக புனிதவதி, விஜயகுமாருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story