ஊட்டி அருகே மழை காரணமாக, தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன - டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஊட்டி அருகே மழை காரணமாக ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. டிரைவரின் சாமர்த்தியத்தால்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் பகலில் இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டியில் பகலில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் மதியம் லேசான மழை பெய்தது. இதற்கிடையே குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை4 மணிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு மலை ரெயில் புறப்பட்டு ஊட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தது. கேத்தி ரெயில் நிலையத்தை கடந்து வந்தபோது ரெயில் தண்டவாளத்தில் பாறைகள்உருண்டு விழுந்து கிடந்தன.
இதனை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக சிறிது தூரத்துக்கு முன்பாகவே மலை ரெயிலை பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து ஊட்டிக்கு செல்ல இருந்த சுற்றுலா பயணிகள் பாதியிலேயே இறக்கி விடப்பட்டு தவிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தனியார் மினி பஸ் மற்றும் வாகனங்களை பிடித்து ஊட்டிக்கு வந்தனர்.
மலை ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாறைகளை உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரிய பாறைகள் என்பதால் அதனை உடைத்து அகற்ற நீண்ட நேரம் ஆனது.
இதனால் ஊட்டி ரெயில் நிலையத்திலிருந்து குன்னூருக்கு மாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக அந்த ரெயிலில் செல்ல டிக்கெட் எடுத்திருந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
ரெயில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்ட பின்னர் மலை ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story