இலங்கை தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்த “தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” - ஓ.பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு
“இலங்கை தமிழர் பிரச்சினையில் பச்சை துரோகம் செய்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” என்று நாங்குநேரி பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நெல்லை,
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
நேற்று 2-வது நாளாக அவர் வடுகச்சிமதில், பத்மநேரி, களக்காடு ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
நாங்குநேரி தொகுதி மக்களாகிய நீங்கள் தான் இந்த தேர்தலில் எஜமானர்கள். நீங்கள் தான் நல்ல தீர்ப்பை கொடுக்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஆட்சி புரிந்து உள்ளது. இதுவரை யார் நல்லாட்சி செய்தார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நல்லாட்சி புரியக்கூடிய ஜெயலலிதாவின் வழியில் வந்த இந்த ஆட்சிக்கு நீங்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கு தொடர்ந்து நீங்கள் ஆதரவு தர வேண்டும். இதற்காக அடையாளமாக இந்த இடைத்தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது மக்களுக்கு எந்த திட்டங்கள் தேவை என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். மக்களுக்கு எப்போதும் உண்ண உணவு கிடைக்க வேண்டும். தங்க இடம் கிடைக்க வேண்டும். எந்த சூழ்நிலை வந்தாலும் 20 கிலோ அரிசி எப்படியாவது பொதுமக்களுக்கு வேண்டும் என்று தெரிவித்தார். அவர் கூறியபடி நாங்கள் இதை வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சி 8 ஆண்டுகளில் என்ன செய்தது? என்று கேட்டுள்ளார். நாங்கள் செய்த சாதனைகள் என்னவென்றால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 2006-2011-ம் ஆண்டு வரை மின்தட்டுப்பாடு இருந்தது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியாலும், தொலைநோக்கு திட்டத்தாலும் ஒரே ஆண்டில் மின்பற்றாக்குறையை நீக்கி மின்மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், காலணி, மடிக்கணினி, பெண்களுக்கு நிதியுதவி, திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், கர்ப்பிணிகளுக்கு பேறுகால உதவியாக ரூ.18 ஆயிரம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டி, கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆடு, மாடுகள், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கி வருகிறோம். இன்னும் ஏராளமான திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம். இதையெல்லாம் பார்க்கும் போது மு.க.ஸ்டாலினுக்கு சாதனையாக தெரியவில்லையா?.
மேலும் 2006-2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் இருந்தது. கந்துவட்டி கொடுமை, நிலஅபகரிப்பு அதிக அளவில் காணப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது முதல்-அமைச்சர் ஜெயலலிதா கந்துவட்டியை ஒழிப்பதற்கும், நிலஅபகரிப்புக்கும் தனிச்சட்டம் இயற்றி நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார். இது எல்லாம் அ.தி.மு.க.வின் சாதனையாக உள்ளது.
மு.க.ஸ்டாலின் வாயில் இருந்து வருவது எல்லாம் பொய் தான். அவர் பேச்சை மக்கள் நம்ப தயாராக இல்லை. ஏனென்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்குறுதி கொடுத்தார். அதாவது தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வைத்து உள்ள நகைகளை உடனே மீட்டுத்தருவோம் என்றார். இதை நம்பி மக்கள் அவருக்கு ஓட்டு போட்டார்கள். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை நகையை திருப்பித் தரவில்லை. இப்போது, மக்கள் கேட்கிறார்கள். ஆனால் அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. மு.க.ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என்று மக்கள் நன்றாக புரிந்து கொண்டு உள்ளனர்.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் விளைவித்த கட்சி என்றால் அது காங்கிரசும், தி.மு.க.வும் தான். காவிரி பிரச்சினை ஏற்பட்டபோது, மத்தியில் ஆண்ட காங்கிரசும், தமிழகத்தை ஆண்ட தி.மு.க.வும் தான் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து உள்ளன. தமிழகத்திற்கு ராஜதுரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் படுதோல்வி அடைய செய்ய வேண்டும்.
மேலும் இலங்கை தமிழர்கள் இலங்கையில் தங்களுடைய உரிமைகளுக்காக போராடி வந்தனர். அவர்களை அழிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு திட்டம் தீட்டினார். இது உளவுத்துறை மூலம் இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மாநிலத்தில் ஆட்சி செய்த தி.மு.க. கட்சிகளுக்கு தெரிந்தது. ஆனாலும் அவர்கள் இலங்கை தமிழர்கள் மீதான போரை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இலங்கையில் பல லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பச்சை துரோகம் செய்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
பொய்களால் மக்களை ஏமாற்றும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. இந்த கூட்டணிக்கு மக்கள் ஏற்கமாட்டார்கள். மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும். அந்த நிலையை மக்களாகிய நீங்கள் உருவாக்கி தர வேண்டும். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் உங்களுக்காக உழைக்கக்கூடியவர். அவர் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். எனவே, அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தில் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, பிரபாகரன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், விஜிலா சத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், ஜெயலலிதா பேரவை செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வடுகச்சிமதில் பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. வாழைகளால் தோரணம் கட்டப்பட்டு இருந்தது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story