எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு, ரூ.17½ கோடி நிலுவைத்தொகை- கலெக்டர் தகவல்
எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ.17 கோடியே 56 லட்சம் நிலுவைத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும் என கடலூரில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மாரியப்பன், இணை இயக்குனர்(வேளாண்மை) முருகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் இளஞ்செல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
ரவிச்சந்திரன்(கீழ்அனுவம்பட்டு):- மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் நமது மாவட்ட எல்லைக்கு வரும்போது கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு பயிர்கடன் அளவை நிர்ணயித்து இழப்பீடு வழங்காமல், கூடுதல் மகசூலுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக் வேண்டும். தண்ணீரை சேமிக்க நீர்பாசன கருத்தரங்கை நடத்த வேண்டும். பொதுசேவை மையங்களில் பயிர்காப்பீடு செய்ய விண்ணப்பிக்கும்போது உரிய ஆவணங்கள் பதிவேற்றம் ஆகி இருப்பதை உறுதி செய்யும் வகையில் சான்று வழங்க வேண்டும்.
சங்கரநாராயணன்(புவனகிரி):- புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி வடிகால் வசதி செய்து தரக்கோரி 3 முறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை.
குஞ்சிதபாதம்:- எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை வருகிற புதன்கிழமைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் எதிர்ப்புள்ள நாட்டு பசுமாடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். காவானுர் பகுதியில் நீர் வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும்.
ரெங்கநாயகி(வடமூர்):- ராதாவாய்க்காலில் புத்தூர், நெடுஞ்சேரி பகுதியில் கழிவுநீர் கலந்து வருவதால் தண்ணீரை சாகுபடிக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தானே வீடு கட்டும் திட்டம் மற்றும் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் பயனானிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. வடமூரில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும்.
செல்வராஜ்(மேல்புளியங்குடி):- ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் கூடலையாத்தூர் மற்றும் கீரனூர்- குணமங்கலம் இடையே தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும்.
கலியபெருமாள் (புதுகூரைப்பேட்டை):- என்.எல்.சி.க்கு நிலம்கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுகூரைப்பேட்டை, விஜயமாநகரத்தில் வழங்கப்பட்ட மாற்று இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும். விஜயமாநகரத்துக்கும், பரூருக்கும் இடையே சேறும், சகதியுமாக உள்ள 9-வது குறுக்கு பாதையை சீரமைத்து தர வேண்டும்.
வெங்கடேசன்(கார்மாங்குடி):- காவானூர்- கள்ளிப்பாடிக்கு இடையே பாலம் அமைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை வழங்கிய அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்கு உரிய பணத்தை உடனடியாக ஆலை நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்:- பாலம் அமைக்கும் திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் பணிகள் நடைபெறும்.
மணிகண்டன்(சிறுபாக்கம்):- சிறுபாக்கம் பகுதியை சுற்றியுள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. வரும்காலத்தில் மக்காச்சோளத்துக்கு பயிர்காப்பீடு செய்ய கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்:- அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா உரம் போதிய அளவில் இருப்பில் உள்ளது. யாராவது உரம் இல்லை என்று சொன்னால் 7338720401 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவித்தால், நேரில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலகிருஷ்ணன்(தையல்குணாம்பட்டினம்):- குடிமராமத்து திட்டத்தில் எங்கள் கிராமத்தில் உள்ள 2 ஏரிகள் தூர்வாரப்பட்டன. ஆனால் பாசன வாய்க்கால்களை தூர்வாராததால் எந்த பலனும் இல்லை.
வேல்முருகன்(அகரஆலம்பாடி):-மணிலா விதை மானியத்தில் வழங்க வேண்டும். உரக்கடைகளில் விலை மற்றும் இருப்பு பட்டியலை வைக்க வேண்டும்.
முருகானந்தம்(காவாலக்குடி):- விவசாயிகளின் கருத்தை கேட்டறிந்து அவர்களின் தேவைக்கேற்ற உரத்தை வழங்க வேண்டும். சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாட்டு வண்டிகளில் கரும்புகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும்.
பாலு(நெய்வாசல்):- வீராணம் ஏரி பகுதி வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.
குப்புசாமி(பெரியகாப்பான்குளம்):- கடந்த 2013-14 ம் ஆண்டில் தேக்கு மரக்கன்று பராமரிப்பு தொகையை வனத்துறை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வயலூர் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். விருத்தாசலம் நகராட்சியில் வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு ரூ.2,500 வசூல் செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
ரவிச்சந்திரன்(கூடலூர்):- பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். விவசாயிகள் பெயரில் ஆலைகள் வாங்கிய கடனை ஆலை பெயருக்கே மாற்றம் செய்ய வேண்டும். தீபாவளிபண்டிகையையொட்டி கறவையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் கடந்த மாதம் 20-ந் தேதி வரை தர வேண்டிய பணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
தென்னரசு(நெல்லிக்குப்பம்):- மேல்பாதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேசும்போது, சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.17 கோடியே 56 லட்சம் வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்த தொகை தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்கப்படும். கரும்பு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க அனுமதிக்கப்பட்ட மானிய தொகையை விட கூடுதலாக உதிரிபாகங்கள் வாங்குவதற்கு ரூ.26 ஆயிரம் முதல் ரூ.49 ஆயிரம் வரை ஆகும் கூடுதல் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே சிறு, குறு என பாகுபாடு இல்லாமல் அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.
Related Tags :
Next Story