பாசனத்துக்காக 30-ந் தேதி தண்ணீர் திறப்பு: கோமுகி அணையில் பராமரிப்பு பணி தீவிரம்


பாசனத்துக்காக 30-ந் தேதி தண்ணீர் திறப்பு: கோமுகி அணையில் பராமரிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:30 PM GMT (Updated: 18 Oct 2019 5:30 PM GMT)

பாசனத்துக்காக 30-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கோமுகி அணையில் பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் மல்லிகைப்பாடி, கல்படை, பொட்டியம் ஆகிய ஆறுகளின் வழியாக வருகிறது.

அணையில் 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இதில் பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கல்படை, பொட்டியம் ஆகிய ஆறுகளில் அதிகளவு தண்ணீர் வரத்தொடங்கியது. இதனால் கோமுகி அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று 42 அடியை எட்டியது. பொட்டியம், கல்படை ஆகிய ஆறுகளின் வழியாக நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீருக்காக கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்காக வருகிற 30-ந் தேதிக்குள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே பொதுப்பணித்துறை சார்பில் அணையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணையில் வர்ணம் பூசும் பணி மற்றும் ஷட்டரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாசனத்துக்காக கோமுகி அணையில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு வருகிற 30-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதற்குள் கனமழை பெய்து அணை நிரம்பினால் முன்னதாக தண்ணீர் திறக்கப்படும் என்றார்.

பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடும் முன் அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story