ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை; பவானியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை; பவானியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 19 Oct 2019 10:30 PM GMT (Updated: 19 Oct 2019 5:27 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. பவானியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

சத்தியமங்கலம், புதுப்பீர்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இது நேற்று அதிகாலை 2 மணி வரை பெய்தது. பின்னர் 5 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சத்தியமங்கலம் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் ரோட்டில் முருகன் கோவில் மேடு என்ற பகுதியில் காட்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தற்போது அதில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அந்த பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு வாகனங்கள் அதன் வழியாக சென்று வருகின்றன.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் முருகன் கோவில் மேடு பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அங்கு வாகனங்கள் செல்வதற்காக போடப்பட்டிருந்த மாற்றுப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக இரவு 10 மணியில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிகாலை 4 மணிக்கு பின்னர் வெள்ளம் வடிந்த பிறகு வாகன போக்குவரத்து தொடங்கியது.

இந்த மழையால் புதுப்பீர்கடவு பகுதியில் உள்ள கோழிப்பள்ளம் தடுப்பணை நிறைந்து உபரிநீர் வெளியேறியது. மேலும் ராமபையலூர், ராஜன்நகர், குய்யனூர் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தது.

பசுவபாளையத்தில் பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கலாமணி என்ற பெண்ணின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் முன் பகுதியில் படுத்திருந்ததால் கலாமணி உயிர் தப்பினார்.

பவானி, குருப்பநாயக்கன்பாளையம், காடையாம்பட்டி, ஜம்பை, மூன்ரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேற்று அதிகாலை 3 மணி வரை கொட்டித்தீர்த்தது. இதைத்தொடர்ந்து விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது.

இந்த மழையால் குரும்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள 9 வீடுகளிலும், பவானி திருவள்ளுவர் நகர் பகுதியில் 6 வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் வீடுகளில் உள்ளவர்கள் முக்கிய பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கினர். உடனே அந்த பகுதிகளுக்கு பொக்லைன் எந்திரம் கொண்டு செல்லப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றது.

இந்த மழையால் தாளக்குளம் ஏரி, காடையாம்பட்டி ஏரி, ஜம்பை ஏரி உள்பட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தன. இதனால் அந்த பகுதியில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பவானி அருகே உள்ள மூன்ரோடு, ஆண்டிக்குளம், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது.

இதற்கிடையே காடையாம்பட்டி ஏரியில் சாயக்கழிவு நீர் கலப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து பெருந்துறை மாசுக்கட்டுபாட்டு வாரிய இளநிலை பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று காடையாம்பட்டி ஏரி தண்ணீரை பரிசோதனை செய்தனர். அப்போது தண்ணீரில் 310 என்ற அளவில் உப்புத்தன்மை (டி.டி.எஸ்.) இருந்தது. மேலும் பரிசோதனை செய்வதற்காக தண்ணீரையும் அங்கிருந்து அதிகாரிகள் எடுத்து சென்றனர். அதுமட்டுமின்றி பவானி வட்டார வளர்ச்சி அதிகாரி செல்வியும் காடையாம்பட்டி ஏரிக்கு சென்று பார்வையிட்டார்.

இந்த மழையில் பவானியை அடுத்த தாளபையனூர் பகுதியை சேர்ந்த ரங்கன் என்பவரின் வீடும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்ததும் பவானி தாசில்தார் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட ரங்கனுக்கு ஆறுதல் கூறினர்.

அந்தியூர், பர்கூர், ஒலகடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளல் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று அதிகாலை 2 மணி வரை கொட்டி தீர்த்தது. பின்னர் விடிய விடிய விட்டு விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் அந்தியூர் அருகே உள்ள பள்ளியபாளையம் ஏரி நிரம்பி வழிந்ததுடன், அதில் இருந்து உபரிநீர் வெளியேறியது.

இதனால் அந்தியூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, மரவள்ளிக்கிழங்கு பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது.

அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 28 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 31½ அடியாக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3½ அடி உயர்ந்து உள்ளது.

அந்தியூரை அடுத்த ஒலகடம் அருகே தாளப்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தன்னுடைய தோட்டத்தில் பாசனத்துக்காக 80 அடி நீளம், 40 அடி அகலம், 10 அடி உயரத்துக்கு தண்ணீர் தொட்டி கட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த தண்ணீர் தொட்டியை திடீரென மின்னல் தாக்கியது. இதி்ல் தொட்டியின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.

பர்கூர் மலைப்பகுதியில் பெய்த மழையால் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மண் அரிப்பின் காரணமாக மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு சுவர் பகுதியில் குழிகள் ஏற்பட்டு உள்ளன.

தாளவாடி, தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், சிக்கள்ளி, ஆசனூர், குளியாடா ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாளவாடி பகுதியில் உள்ள 50-க்கும் ஏற்பட்ட விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது.

மேலும் தாளவாடி வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக அங்குள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கு சென்று கலந்தது.

தாளவாடிைய அடுத்த திம்பம் மலைப்பாதையில் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக 25-வது, 26-வது, 27-வது கொண்டை ஊசி வளைவுகளில் அதிக அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 27-வது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட மண் சரிவால் 3 மரங்கள் வேரோடு ரோட்டில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே பெருமுகையில் சஞ்சீவராயன் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு தொட்டக்கோம்பை வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது அங்குள்ள மாப்பிள்ளை குண்டுப்பள்ளம் வழியாக வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சஞ்சீராவயன் குளத்தில் ஓரளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொட்டக்கோம்பை வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மழை நீரானது மாப்பிள்ளை குண்டுப்பள்ளம் வழியாக சஞ்சீவராயன் குளத்தை சென்றடைந்தது. இதனால் சஞ்சீவராயன் குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறியது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் சஞ்சீவராயன் குளம் நிரம்பியதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வரட்டுப்பள்ளம் - 64.6

கொடிவேரி - 55.2

பவானி - 40.8

பவானிசாகர் - 39.8

குண்டேரிப்பள்ளம் - 24

நம்பியூர் - 17

கோபிசெட்டிபாளையம் - 16

அம்மாபேட்டை - 11.4

கவுந்தப்பாடி - 10

தாளவாடி - 9

சென்னிமலை - 8

பெருந்துறை - 6

ஈரோடு - 5

கொடுமுடி - 4.2

சத்தியமங்கலம் - 3

Related Tags :
Next Story