திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை ஆய்வு கூட்டம் அரசு முதன்மை செயலாளர் பங்கேற்பு


திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை ஆய்வு கூட்டம் அரசு முதன்மை செயலாளர் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Oct 2019 4:00 AM IST (Updated: 20 Oct 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் அரசு முதன்மை செயலாளர் பங்கேற்றார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு முதன்மை செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்) எஸ்.கே.பிரபாகர், கண்காணிப்பு குழு அலுவலர்கள் குமரகுருபரன், ராஜேஷ், ஜெயந்தி, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை போன்ற துறைகளை சேர்ந்த அனைத்து முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதன்மை செயலாளர் அதிகாரிகளுக்கு விளக்கினார். மேலும் மாவட்டத்தில் 64 குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 6 குழுக்கள் முன்னெச்சரிக்கை தேடுதல் மற்றும் மீட்பு, வெளியேறுதல், தற்காலிக தங்கும் முகாம், பேரிடர் மீட்பு காவலர், கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

88 ஆயிரத்து 645 மணல் மூட்டைகள், 4 ஆயிரத்து 503 சவுக்கு மரக்கம்புகள், 263 பொக்லைன் எந்திரங்கள், 123 மின் அறுவை ரம்பங்கள், 265 கயிறுகள், 131 படகுகள், ஒரு அதிநவீன நீர் உறுஞ்சும் எந்திரம், 160 ஜெனரேட்டர்கள், 26 தண்ணீர் லாரிகள், 276.34 மெட்ரிக் டன் பிளச்சிங் பவுடர், 56 தார்ப்பாய்கள், 169 டார்ச் லைட்டுகள், 17 ஆயிரத்து 638 மின்கம்பங்கள், 180 மின்மாற்றிகள் போன்றவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலை, நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

42 மருத்துவக்குழுக்களும், 32 இடங்களில் அவசர ஊர்தி, தேவையான அளவு மருந்து பொருட்கள், ஊராட்சி அளவில் 3 நடமாடும் குழுக்கள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு தண்ணீர் வரும் பட்சத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய நேரத்தில் பணிகளில் ஈடுபட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குழுவினர் அனைவரது தொலைபேசி எண்களை பகிர்ந்து கொண்டு உரிய நேரத்தில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளவேண்டும், அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் ஆரம்ப கட்டங்களிலேயே சரிசெய்து கொள்ளலாம்.

2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் மாவட்டத்தில் 133 பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. பெண் முதல்நிலை பொறுப்பாளர்கள் சிறப்பாக செயலாற்றும் விதத்தில் 436 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. 5 நிரந்தர தங்கும் முகாம்களும், 3 புயல் பாதுகாப்பு நிவாரண முகாம்களும், 660 தற்காலிக தங்கும் முகாம்களும் மாவட்டத்தில் உள்ளது. தற்காலிக தங்கும் முகாம்களாக அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவை அனைத்து அடிப்படை வசதிகளுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து விதத்திலும் தயார் நிலையில் உள்ளது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story