கோவை அருகே மளிகை கடைக்காரர் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை: தங்க கம்மலுக்காக காதுகளை துண்டித்து சென்ற கொடூரம்


கோவை அருகே மளிகை கடைக்காரர் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை: தங்க கம்மலுக்காக காதுகளை துண்டித்து சென்ற கொடூரம்
x
தினத்தந்தி 20 Oct 2019 4:45 AM IST (Updated: 20 Oct 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே மளிகை கடைக்காரர் மனைவி படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்து இருந்த தங்க கம்மலுக்காக காதுகளை கொலையாளிகள் துண்டித்து சென்றனர்.

போத்தனூர்,

திருவள்ளூர் மாவட்டம் மணலி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மனைவி தேவகி (வயது 45). குழந்தை இல்லாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் ஜெயபாலின் 2-வது மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபால், தேவகி ஆகியோர் கோவை அருகே போத்தனூர் செட்டிப்பாளையத்தை அடுத்த மயிலேரிபாளையத்துக்கு வந்து குடியேறினர். அவர்கள் அங்கு சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். அந்த மளிகை கடைக்குள் ஒரு அறையிலேயே அவர்கள் தங்கினர். குழந்தைகள் இருவரும் மணலியில் உள்ள வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தனர்.

சம்பவத்தன்று ஜெயபால் வேலை நிமித்தமாக நெல்லை மாவட்டத்துக்கு சென்று இருந்தார். தேவகி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் அவா் வழக்கம் போல் கடையில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை உள்பக்கமாக பூட்டிவிட்டு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அவர்களது மளிகை கடை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவா்கள் கொடுத்த தகவலின் பேரில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

அப்போது கடையின் உள்ளே தீயணைப்பு வீரர்கள் சென்று பார்த்தனர். அங்கு தேவகி கழுத்து பகுதியில் ரத்தக்காயங்களுடன், 2 காதுகளும் அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த தேவகியின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். மேலும் அவர் அணிந்து இருந்த நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. அவர் அணிந்து இருந்த கம்மலை கழற்ற முடியாததால் 2 காதுகளையும் துண்டித்து காதுகளுடன் கம்மலை எடுத்து சென்ற கொடூர சம்பவமும் நடந்து உள்ளது. மேலும் கொலையை மறைக்க கடைக்கு தீவைத்து சென்றதும் தெரியவந்தது.

இதை அறிந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தேவகியை கொன்று நகையை திருடிச்சென்ற கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். எத்தனை பவுன் நகைகள் திருடு போனது என்ற விவரம் தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மளிகை கடைக்காரரின் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தங்க கம்மலுக்காக 2 காதுகளையும் மர்ம ஆசாமிகள் துண்டித்து சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story