திருச்சி நகைக்கடை கொள்ளைக்கு பயன்படுத்திய சரக்கு வேன் பறிமுதல் - சுரேசுக்கு போலீஸ் காவல் இன்று நிறைவு
திருச்சி நகைக்கடை கொள்ளைக்கு பயன்படுத்திய சரக்கு வேன் சுரேஷ் கொடுத்த தகவலின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுரேசுக்கு போலீஸ் காவல் இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெறுவதையொட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளான்.
மலைக்கோட்டை,
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி அளவிலான நகைகளை கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் கடந்த 10-ந் தேதி சரண் அடைந்தான்.
இதேபோல திருவாரூர் முருகனும் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான். சுரேசை திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கடந்த 14-ந் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்களை அவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். மேலும் சில நடிகைகளின் பெயரையும் குறிப்பிட்டு உறவினரான திருவாரூர் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தான். இந்த தகவல்கள் தான் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில் கொள்ளையன் சுரேஷ், திருவண்ணாமலையில் ஒருவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்திருந்தான். இதைதொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு அவனை அழைத்து சென்றனர். அவன் தெரிவித்த நபர், வக்கீல் ஆவார். அவரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்திய போது தன்னிடம் பணம் எதுவும் கொடுத்து வைக்கவில்லை என அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து தேவைப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அவரிடம் தனிப்படை போலீசார் தெரிவித்து விட்டு வந்தனர்.
இதற்கிடையில் சரக்கு வேன் ஒன்றை பயன்படுத்தி லலிதா ஜூவல்லரி நகைக்கடையை நோட்டமிட்டதாக தெரிவித்திருந்தான். மேலும் அந்த சரக்கு வேன் திருவண்ணாமலையில் இருப்பதாக கூறியிருந்தான். இதைதொடர்ந்து அந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வேனை மற்ற கொள்ளை சம்பவங்களிலும் பயன்படுத்தியதாக போலீசாரிடம் அவன் கூறியிருக்கிறான்.
இதற்கிடையில் சுரேசுக்கு போலீஸ் காவல் இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து இன்று மாலை திருச்சி கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 2-ல் அவனை போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். அதன்பின் அவன் நீதிமன்ற காவலில் அடைக்கப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story