குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 21 Oct 2019 3:30 AM IST (Updated: 21 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்த பிறகும் அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்த தடையை நேற்று முன்தினம் போலீசார் நீக்கினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் சுற்றுவட்டார பகுதியில் வெயில் இல்லை. பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த நிலையில் நேற்று மாலை மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக மெயின் அருவியில் மாலை 6 மணியளவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் அவசரமாக வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். இதையடுத்து அவர்கள் மற்ற அருவிகளுக்கு சென்றனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு இருப்பதால் கோவிலுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story