நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் “அ.தி.மு.க. ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
“நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது“ என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை,
நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் ஆகும். ஆளுங்கட்சியின் அதிகாரபலம் மற்றும் பணபலத்தை எதிர்த்து போட்டியிடுகிறோம். நாங்கள் கொள்கையும், சத்தியத்தையும் நம்பி போட்டியிடுகிறோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படுகிறது.
தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும், மக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் எங்கள் கூட்டணி செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது.
எங்கள் கூட்டணி நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறும். ரூபி மனோகரன் துப்பாக்கி ஏந்தி தாய் நாட்டை காக்க பேராடியவர். இமயமலை அடிவாரத்தில்கூட பணியாற்றியுள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல் எங்கள் வேட்பாளருக்கு இமயம் முதல் குமரி வரை ஒன்று தான்.
ரூபி மனோகரன் குற்றச்செயலுக்கு அப்பாற்பட்டவர். கட்ட பஞ்சாயத்தை அறியாதவர். ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர பாடுபடுவார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் வழியில் அவர் மக்களுக்காக உழைப்பார்.
காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 15 ஆயிரம் ஆரம்பப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. தொழில் வளர்ச்சி பெருகியது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி வளர்ச்சி பாதையில் செல்லவில்லை.
பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த பிறகு அ.தி.மு.க. மிகவும் பலவீனமாக இருக்கிறது. மோடிக்கு ஆதரவு, உள்ளூர் பா.ஜனதாவினருக்கு எதிர்ப்பு என்ற வகையில் அ.தி.மு.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள். பா.ஜனதா தலைவர் இல்லாத குறையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போன்றவர்கள் ஈடு செய்து வருகிறார்கள்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும், பணநாயகத்துக்கும் இடையிலான போட்டியாகும். அ.தி.மு.க.வினர் தொகுதி முழுவதும் பணத்தை இறைத்து உள்ளனர். எங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எங்கள் கட்சி வேட்பாளருக்கு பொதுமக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். அவர்களை சிலர் ஓட்டு போட விடாமல் தடுக்கிறார்கள். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். வெற்றி திருமகள் எங்களை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார். எங்கள் வேட்பாளர் ரூபி மனோகரன் நிச்சயமாக வெற்றி பெறுவார்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
Related Tags :
Next Story