டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பள்ளிகளில் சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிப்பு; கலெக்டர் அறிவுரை


டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பள்ளிகளில் சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிப்பு; கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 23 Oct 2019 4:30 AM IST (Updated: 22 Oct 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பள்ளிகளில் சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி அறிவுறுத்தினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பொதுமக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை குடித்தால், தொற்றுநோய் பரவி விடும். அதேபோல் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்காவிட்டால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே, குடியிருப்பு பகுதிகளில் தேங்காய் ஓடு, பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உரு வாகாமல் தடுக்க வேண்டும். ஊராட்சிகள், பேரூராட்சிகளில் கொசு மருந்து தெளிப்பான் கருவிகளை பழுது பார்த்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். குடிநீரை குளோரினேசன் செய்த பின்னரே வினியோகிக்க வேண்டும். இதுகுறித்து மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குடிநீர் குழாய்களில் கசிவுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். அதேபோல் குளங்களை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடந்தால், முழுமையாக அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும்.

மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளுக்கு கட்டாயம் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். அதன்மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, எலி காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். அதேபோல் 10 படுக்கைகளுடன் கூடிய காய்ச்சல் வார்டு தொடங்கி, 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவர், செவிலியரை பணியில் அமர்த்த வேண்டும்.

இதுதவிர அனைத்து கிராமங்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, பாதிப்பு இருந்தால் உடனடியாக அறிக்கை வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், பள்ளிக்கட்டிடங்கள், விடுதிகள், தியேட்டர்கள், உணவகங்கள், டீக்கடைகளில் கொசுப்புழுக்கள் உருவாகுவதை தடுக்க வேண்டும்.

அதேபோல் அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனடியாக கிராம சுகாதார செவிலியருக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story