தவளக்குப்பத்தில் போதையில் இருந்த வியாபாரியிடம் நகை திருட்டு; வாலிபர் கைது


தவளக்குப்பத்தில் போதையில் இருந்த வியாபாரியிடம் நகை திருட்டு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2019 10:00 PM GMT (Updated: 22 Oct 2019 8:11 PM GMT)

தவளக்குப்பத்தில் போதையில் இருந்த வியாபாரியிடம் நகை, செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

புதுவை தவளக்குப்பம் திருமலை நகரை சேர்ந்தவர் பூபதிராஜா (வயது 39). ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடிக்க தவளக்குப்பத்தில் உள்ள மதுக்கடைக்கு காரில் சென்றார். ஆனால் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கடை மூடப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த பூபதிராஜா அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரை சேர்ந்த செல்வகுமார் (24), பெரியகாட்டுப்பாளையம் நாகமுத்து (26) ஆகியோர் பூபதிராஜாவிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். செல்வகுமார் தன்னிடம் உயர்ரக மதுபாட்டில் இருப்பதாக தெரிவித்தார். உடனே பூபதிராஜா மது குடிப்பதற்காக அவர்கள் இருவரையும் தனது காரில் புதுக்குப்பம் பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு போலீஸ் கெடுபிடி இருந்தது.

இதையடுத்து பூபதிராஜா அவர்கள் 2 பேரையும் தனது வீட்டுக்கு அழைத்துவந்தார். அங்கு அவர்கள் மதுவை பங்கிட்டு குடித்தனர். பூபதிராஜாவுக்கு போதை தலைக்கேறியது. இந்த நிலையில் செல்வகுமார், நாகமுத்து இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

போதை தெளிந்து எழுந்த பூபதிராஜா, தான் அணிந்திருந்த 2 பவுன் மோதிரம், 2½ பவுன் சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் தன்னுடன் சேர்ந்து மது குடித்தவர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, அவர் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமார், நாகமுத்துவை பிடித்து விசாரித்தனர். இதில் நகைகள், செல்போன் திருடியதை செல்வகுமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4½ பவுன் நகைகள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். செல்வகுமாரின் கூட்டாளியான நாகமுத்துவிடம் விசாரித்ததில் திருட்டில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர்.

Next Story