திருவாரூரில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


திருவாரூரில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணியை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட துர்க்காலயா சாலையில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. கடந்த 9-ந்தேதியன்று மாநில அளவில் தமிழக கவர்னரால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இக்கணக்கெடுப்பிற்காக திருவாரூர் மாவட்டத்தில் 18 மேற்பார்வையாளர்கள் மற்றும் 90 களப்பணியாளர்களுக்கு 2 கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களையும், 433 கணக்கெடுப்பு நகர்புற அலகுகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

விவரங்கள் சேகரிப்பு

பலதரப்பட்ட உற்பத்தி, வினியோகம், விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செயல்படும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களை பற்றிய கணக்கெடுப்பே பொருளாதார கணக்கெடுப்பாகும். இந்த கணக்கெடுப்பில் குடும்ப தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, வயது, இனம், சமூகப்பிரிவு, கைபேசி எண், செய்யும் தொழில், சுயதொழில் முதலீடுகள், வேலை ஆட்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

இக்கணக்கெடுப்பு விவரங்கள் முற்றிலும் மத்திய அரசின் பொருளாதார திட்டமிடலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் அரசின் கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் புள்ளியல் துறை துணை இயக்குனர் திருஞானம், தாசில்தார் நக்கீரன், தேசிய மாதிரி ஆய்வு நிறுவன முதுநிலை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், புள்ளியல் இயல் அலுவலர் சிவகுமார், பொது சேவை மைய மாவட்ட மேலாளர் கிரிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story