போலீஸ் காவலில் வாலிபர் பலி வடலா டி.டி. போலீஸ் நிலையம் முற்றுகை; தடியடி-கல்வீச்சு - 5 போலீசார் பணி இடைநீக்கம்
போலீஸ் காவலில் வாலிபர் பலியான சம்பவத்தை கண்டித்து வடலா டி.டி. போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர் விஜய் சிங் (வயது26). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விஜய் சிங் தனது நண்பர் அங்கித் மிஸ்ராவுடன் வடலா டி.டி. போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கின் ஒளி அந்த பகுதியில் தனிமையில் இருந்த காதல் ஜோடி மீது பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக காதல் ஜோடிக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வடலா டி.டி. போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து போலீசார் 2 பேரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், வாலிபர் விஜய் சிங் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ்நிலையத்துக்கு வெளியே காத்திருந்த விஜய் சிங்கின் பெற்றோா் அவரை சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டா்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் சயான் கோலிவாடா பகுதி பொதுமக்கள் விஜய் சிங்கை போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக கூறி வடலா டி.டி. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து விஜய் சிங்கின் நண்பர் அங்கித் மிஸ்ரா கூறியதாவது:-
போலீசார் எங்களை போலீஸ் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கினர். அப்போது, விஜய் சிங் நெஞ்சு வலிக்கிறது என அலறினார். ஆனால் போலீசார் அவர் நடிப்பதாக நினைத்து கண்டுகொள்ளவில்லை. மேலும் அவர் குடிக்க தண்ணீர் கேட்ட போதும் கொடுக்காமல் இருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு 2 மணியளவில் அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு போலீசார் குடும்பத்தினரை அழைத்து அவரை டாக்சியில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே போலீசார் விஜய் சிங்கை அடிக்கவில்லை என வடலா டி.டி. போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர சாங்கலே கூறியுள்ளார்.
இந்தநிலையில் நேற்றும், உயிரிழந்த விஜய் சிங்கிற்கு நீதிகேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் பேரணியாக புறப்பட்டு வடலா டி.டி. போலீஸ் நிலையம் முன் குவிந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விஜய் சிங் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர். நேரம் செல்ல செல்ல அங்கு அதிகமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கலைந்து செல்லாமல் கோஷம் எழுப்பியதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த வழியாக சென்ற பெஸ்ட் பஸ் மீது சரமாரி கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சய் நிருபம், கிருபாசங்கர் சிங் ஆகியோரும் போலீஸ்நிலையம் வந்தனர். அவர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து விஜய் சிங் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறினார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வடலா டி.டி. போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் துணை கமிஷனர் பிரனாய் அசோக் கூறினார்.
Related Tags :
Next Story