பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம் - கலெக்டர் வினய் அறிவிப்பு
பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து பொதுமக்கள் டெலிபோனில் தகவல் கொடுக்கலாம் என்று கலெக்டர் வினய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை,
மதுரை மாவட்டத்தில் நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைப்பது, சீரமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆழ்துளை கிணறுகள் ஒழுங்காற்று விதிப்படி அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைப்பதும், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடாமல் வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே நில உரிமையாளர்கள் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடி வைக்க வேண்டும். மேலும் மழை நீர் சேகரிப்புக்கு பயன்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் பழுதடைந்த அல்லது பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், தரைமட்ட கிணறுகள், கைப்பிடிச்சுவர் இல்லாத கிணறுகள் குறித்து பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால தொலைபேசி எண் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் 0452-2546161 என்ற டெலிபோன் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். 9789270122 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகைப்படத்துடன் புகார் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story