மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பலத்த மழை - பள்ளிகளுக்கு விடுமுறை


மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பலத்த மழை - பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 5:02 PM GMT)

மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் மாலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை நின்றது. நள்ளிரவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை பலத்த மழையாக உருவெடுத்தது.

தேனி, ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய மழை நீடித்தது. அதிகாலையில் இருந்து பலத்த மழை, சாரல் மழை என மாறிமாறி பெய்து கொண்டே இருந்தது.

விடாமல் மழை பெய்து கொண்டே இருந்ததால் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று காலையில் தெரிவித்தார். இதனால், பள்ளிகள் செயல்படவில்லை.

ஒரு சில தனியார் பள்ளிகள் வழக்கம்போல் தங்கள் பள்ளிக்கு வாகனங்களில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்றனர். பின்னர், அந்த பள்ளி நிர்வாகங்களும் தங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு, மாணவ, மாணவிகளை திருப்பி அழைத்துச் சென்று அவர்களின் ஊர்களில் இறக்கி விட்டன.

இந்த பலத்த மழை காரணமாக தேனி நகரின் பிரதான சாலைகளான கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலை ஆகிய இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் தரைப்பகுதி சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்ட நிலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால், பஸ்களில் வந்த பயணிகள் பரிதவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை நேற்று காலை 10 மணி வரை நீடித்தது. பின்னர் பகலில் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்த மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு, வைகை, கொட்டக்குடி, வராகநதி ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் அமைந்துள்ள கடமான், ஓட்டணை, அம்மாகுளம் உள்ளிட்ட கண்மாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

உப்புக்கோட்டை, கூழையனூர், பாலார்பட்டி, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. நேற்று பெய்த மழைக்கு வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் தரையில் சாய்ந்தது. இதனால் நெல் விளைச்சல் பாதிப்படைந்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 28.5 செ.மீ. (285.1 மில்லி மீட்டர்) மழையளவு பதிவானது. இதன் சராசரி 23.8 மில்லிமீட்டர் ஆகும். மாவட்டத்தில் ஒவ்வொரு இடங்களிலும் பதிவான மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-

ஆண்டிப்பட்டி-28.6, அரண்மனைப்புதூர்-19.8, போடி-8.6, கூடலூர்-22.4, மஞ்சளாறு-22, பெரியகுளம்-19.4, முல்லைப்பெரியாறு அணை-12.4, தேக்கடி-55, சோத்துப்பாறை-35, உத்தமபாளையம்-14.1, வைகை அணை-20, வீரபாண்டி-28 என மழையளவு பதிவானது. 

Next Story