மாவட்டத்தில் பலத்த மழை பள்ளி விளையாட்டு திடலில் தேங்கிய நீரால் மாணவிகள் அவதி


மாவட்டத்தில் பலத்த மழை பள்ளி விளையாட்டு திடலில் தேங்கிய நீரால் மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 9:47 PM GMT)

கரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதில் பள்ளி விளையாட்டு திடலில் மழைநீர் தேங்கியதால் மாணவிகள் அவதி அடைந்தனர்.

கரூர்,

திருப்பூர் மாவட்டம் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்து வருவதால், 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 72.84 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் உபரிநீர் கரூர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 800 கனஅடி நீர் தொடர்ச்சியாக ஆற்றில் திறந்து விடப் படுவது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த நிலையில் அமராவதி ஆற்று நீரானது கரூர் செட்டிப்பாளையம் அணை, ஆண்டாங்கோவில் தடுப்பணையை கடந்து நேற்று காலை கரூர் நகரை அடைந்து கடைமடை பகுதியான திருமுக்கூடலூரை நோக்கி பாய்ந்து சென்றது. அமராவதி ஆற்று நீரை பார்ப்பதற்காக புதிய அமராவதி பாலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

செல்பி எடுத்தனர்

ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை மேய்ச்சலுக்காக ஆற்றில் விட்டிருந்தவர்கள் உடனடியாக அதனை வெளியேற்றினர். மேலும் பாலத்தில் நின்றிருந்தவர்கள் பூக்களை அமராவதி ஆற்றில் தூவி வரவேற்றனர். இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை காண முடிந்தது.

விவசாய பணிகள்

மழைக்காலம் தொடங்கி விட்டதாலும், கரூர் அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் கரூர், தாந்தோன்றிமலை, சுக்காலியூர், தோரணக்கல்பட்டி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், பஞ்சமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நெல்சாகு படிக்காக நாற்று நடும் பணியில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக தண்ணீரின்றி வறட்சிபகுதியாக காட்சியளித்த கரூர், தற்போது பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வீடு மற்றும் பொது இடங்களில் வறண்டுபோயிருந்த ஆழ்துளை கிணறுகளில் நீரோட்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமராவதி ஆற்று நீரை கடைமடை பகுதி வரை திறந்து விட்டு விவசாய பணிகளுக்கு உதவிகரமாக இருக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் வீடு, வணிகநிறு வனங்களில் இருந்து கழிவுநீர், சாயக்கழிவு உள்ளிட்டவற்றை யாரேனும் ஆற்று நீரில் திறந்து விடுகின்றனரா? என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டீசல் என்ஜின் மூலம் ஆற்றில் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தேங்கி நிற்கும் மழைநீர்

வெள்ளியணை பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வெள்ளியணை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டிடங்களின் நடுவே உள்ள விளையாட்டு திடலில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் செல்ல மிகவும் அவதி அடைந்தனர். தேங்கி நிற்கும் மழை நீரால் மாணவிகள் விளையாட முடியாத சூழ்நிலையும், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் வெயில் அடித்துவந்த நிலையில், பின்னர் லேசாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் பள்ளிகளை விட்டு வந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குளித்தலை பஸ்நிலையத்தில் நனைந்த படியே பஸ்சிற்காக காத்திருந்தனர்.

மழையளவு விவரம்

மேலும் கரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கரூர் பஸ் நிலையம், ஜவகர் பஜார், தாந்தோன்றிமலை, புலியூர் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பொதுமக்கள் குடைகளை பிடித்த படியே சென்றதை காண முடிந்தது. மேலும் தாழ்வான பகுதியில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழை யளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கரூர்-10.4, அரவக் குறிச்சி-25, அணைப்பாளையம்-7, க.பரமத்தி-5, குளித்தலை-10, தோகைமலை-6, கிருஷ்ணராயபுரம்-7.8, மாயனூர்-7, பஞ்சப்பட்டி-30, கடவூர்-42, பாலவிடுதி-42.1, மைலம்பட்டி-25. 

Next Story