கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடும் பணிகள் - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் மூடும் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட போகனப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி ஆகிய ஊராட்சியில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இரும்பு மூடி மற்றும் கான்கீரிட் கட்டமைப்பு கொண்டு மூடிவைக்கும் பணிகளை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட 30 ஊராட்சிகளில் 152 அரசு ஆழ்துளை கிணறுகள், தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் 93 ஆழ்துளை கிணறுகள் என மொத்தம் 245 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை இரும்பு மூடிகள், மற்றும் கான்கீரிட் கட்டமைப்புகள் கொண்டு மூடும் பணிகள் தற்போது வேகமான நடைபெற்று வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட இட்டிக்கல் அகரம், அகசிப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி, பெத்தனப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி, நாரலப்பள்ளி, கம்மம்பள்ளி, திம்மனப்பள்ளி, மல்லிநாயனப்பள்ளி, பெரியகோட்டப்பள்ளி மற்றும் கல்லுகுறுக்கி உள்ளிட்ட 30 ஊராட்சிகளில் அரசு மற்றும் தனியார் விவசாய நிலங்களில் 245 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றை மூடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தற்போது காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் 5 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பெத்தனப்பள்ளியில் 7 ஆழ்துளை கிணறுகளை இரும்பு பிளேட்டுகள் அமைத்தும், கான்கீரிட் கட்டமைப்பு கொண்டு மூடப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் இதேபோல பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு அதனை மூடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயனற்று பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து புகார்கள் தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசி எண்: 04343- 234444 என்ற எண்ணிற்கும், 6369700230 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேகா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், பெத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற செயலர் கனகா, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி மன்ற செயலர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story