கொருக்குப்பேட்டையில் மாநகராட்சி நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கொருக்குப்பேட்டையில் மாநகராட்சி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், சாலை மறியல் செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, சிறு தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் பழுது பார்க்கும் இடமாக மாற்றி மேல் வாடகைக்கு விட்டு வந்தனர்.
இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்துக்கு வாடகை வசூலித்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வாடகையை முறையாக செலுத்தாமல் இருந்தனர். மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தாததால் ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்யும்படி கூறினர்.
இதனால் ஆக்கிரமிப்பாளர்கள், அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்றும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படியும் உத்தரவிட்டது.
இடித்து அகற்றம்
அதன்பேரில் நேற்று தண்டையார்பேட்டை 4-வது மண்டல அதிகாரி காமராஜ்(பொறுப்பு), செயற்பொறியாளர் புவனேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் ரங்கசாமி, உதவி பொறியாளர் தனசேகர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆர்.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
மாநகராட்சி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய 3 கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றிய அதிகாரிகள், அந்த கட்டிட வளாகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
வாக்குவாதம்
அப்போது அந்த நிலத்தை ஆக்கிரமித்து இருந்த பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தரும்படியும், அதற்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விடுவதாகவும் தெரிவித்தனர்.
அதை ஏற்று ஒரு வாரம் கால அவகாசம் வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள், அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும் என தெரிவித்துவிட்டு, மீதம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story