கர்நாடக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்: அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள “மகா” புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்


கர்நாடக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்: அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள “மகா” புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 1 Nov 2019 4:45 AM IST (Updated: 1 Nov 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் “மகா“ புயல் மையம் கொண்டுள்ளதாகவும், அதனால் கர்நாடக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மங்களூரு,

தென்மேற்கு அரபிக்கடலில் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து தென்மேற்காக 220 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று முன்தினம் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருந்தது. அது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தற்போது புயலாக உருவாகி உள்ளது. அந்த புயலுக்கு “மகா“ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. அது தற்போது திருவனந்தபுரம் அருகே அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மகா புயல் வடமேற்கு திசையில் இருந்து நகர்ந்து லட்சத்தீவை கடந்து செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மகா புயலால் கர்நாடக கடலோர மாவட்டங்கள், தென் கர்நாடக மாவட்டங்கள், கேரளா மற்றும் தமிழகத்தில் இடி-மின்னலுடனும், சூறாவளி காற்றுடனும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

புயல் காரணமாக நேற்றும் காலை முதல் இடி-மின்னலுடனும், சூறாவளி காற்றுடனும் உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழை காரணமாக உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கர்நாடக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்கர்நாடக மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க மகா புயல் காரணமாக உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களின் கடல் பகுதியில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 20 அடிக்கும் மேலாக கடல் அலை எழும்பி வருகிறது. இதனால் கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்பி விட்டனர்.

மகா புயலின் தாக்கம் இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும் என்றும், அதுவரை மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதனால் மீனவர்களின் படகுகள் மங்களூரு, மல்பே உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கடலோர காவல் பாதுகாப்பு குழுமம் சார்பில் கடலில் ஒரு கப்பல் ரோந்து வந்து கொண்டிருக்கிறது.

அது புயல் குறித்தும், கடல் சீற்றம் குறித்தும் கண்காணித்து வருகிறது. அந்த ரோந்து கப்பலில் 2 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கர்நாடக கடலோரங்களில் உள்ள துறைமுகங்களில் இருந்தும் புயலின் தாக்கம், அதன் வேகம், அது நகர்ந்து செல்லும் திசை ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருவதாக துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story