திருப்பரங்குன்றம் அருகே, நிலையூர் கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு - கண்மாய்களுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
திருப்பரங்குன்றம் பகுதியில் பெய்த தொடர் மழையால் நிலையூர் கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கண்மாயில் சேருகிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மானாவாரி நிலங்கள் சார்ந்த தென் பழஞ்சி, வடபழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தனக்கன்குளம், தோப்பூர் உள்ளிட்ட கிராமத்து விவசாயிகள் இன்னும் கன மழை பெய்ய வேண்டும், அதில் கண்மாய்கள் நிரம்ப வேண்டும் என்று எதிர்பார்த்தபடி உள்ளனர்.
இதே சமயம் நாகமலை புதுக்கோட்டை, வடிவேல்கரை, விளாச்சேரி, கூத்தியார்குண்டு, நிலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய பணியை நம்பிக்கையோடு தொடங்கியுள்ளனர்.
இதற்கு காரணம், சோழவந்தான் முள்ளிப்பள்ளம் வழியே நிலையூர் கால்வாயில் உபரி மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அதன் தண்ணீர் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே வைகை அணையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிலையூர் கால்வாயில் கரையை ததும்பியபடி பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. இதனை கண்டு நிலையூர் கால்வாயை சார்ந்த பாசன விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story