பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 39 அடியாக உயர்வு


பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 39 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 3 Nov 2019 4:15 AM IST (Updated: 2 Nov 2019 9:10 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்த போதிலும், அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 39 அடியாக உயர்ந்துள்ளது.

நாகர்கோவில்,

அரபிக்கடலில் உருவான மகா புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. கால்வாய்களை தூர்வாராததால் தான் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். குமரி மாவட்டம் முழுவதும் மழை காரணமாக 200–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை பெய்யவில்லை. வழக்கம் போல வெயில் அடிக்க தொடங்கியது. இதே போல நேற்று காலையிலும் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மதியம் 3 மணிக்கு மேல் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மழை இல்லாததால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்திருந்த வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கியது. மேலும் வயல்கள், வாழை, தென்னை மற்றும் ரப்பர் தோட்டங்களை சூழ்ந்த தண்ணீரும் மெல்ல மெல்ல வடிந்து வருகிறது.

அணைகள்

குமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்தாலும் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதாவது நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 867 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 1,667 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 273 கனஅடியும், பொய்கை அணைக்கு 26 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 52 கனஅடியும், முக்கடல் அணைக்கு 5 கனஅடியும் தண்ணீர் வந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 38.65 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் நேற்று 39.15 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 48 அடி ஆகும்.  

அதே சமயத்தில் அணைகள் நிரம்பியதால், பெருஞ்சாணி அணையில் இருந்து 1,667 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 273 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 52 கனஅடியும் உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.


Next Story