மராட்டியத்தில் 7-ந்தேதிக்குள் ஆட்சி அமையாவிட்டால் அரசியல் கட்சிகளை அழைத்து கவர்னர் பேசுவார் - ராம்தாஸ் அத்வாலே பேட்டி


மராட்டியத்தில் 7-ந்தேதிக்குள் ஆட்சி அமையாவிட்டால் அரசியல் கட்சிகளை அழைத்து கவர்னர் பேசுவார் - ராம்தாஸ் அத்வாலே பேட்டி
x
தினத்தந்தி 4 Nov 2019 3:30 AM IST (Updated: 4 Nov 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 7-ந்தேதிக்குள் ஆட்சி அமையாவிட்டால் அரசியல் கட்சிகளை அழைத்து கவர்னர் பேச்சுவார்த்தை நடத்துவார் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பேசினார்.

மும்பை,

சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவிக்கான போட்டியால் மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று முன்தினம் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சி தலைவர்களுடன் மும்பையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது அவர் கவர்னரிடம், பா.ஜனதாவுக்கு சிறிய கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் சேர்த்து 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறினார்.

மேலும் தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

இது குறித்து நேற்று ராம்தாஸ் அத்வாலே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கவர்னர் வரும் 7-ந்தேதி வரை காத்திருப்பார். அதுவரை மராட்டியத்தில் தெளிவான பெரும்பான்மை பலத்துடன் எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத பட்சத்தில் கவர்னர் அரசியல் கட்சிகளை அழைத்து புதிய அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story