அரசு அதிகாரிகள் களத்துக்கு சென்று பணியாற்ற வேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு


அரசு அதிகாரிகள் களத்துக்கு சென்று பணியாற்ற வேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 4 Nov 2019 5:00 AM IST (Updated: 4 Nov 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

அரசு அதிகாரிகள் களத்துக்கு நேரடியாக சென்று பணியாற்ற வேண்டும் என கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க அரசு அதிகாரிகள் நேரடியாக களத்துக்கு சென்று பணியாற்ற வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவ அதிகாரிகள் மருத்துவமனைகளுக்கும், போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையங்களுக்கும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிகள் நடைபெறும் இடத்துக்கும், போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் நிலையம் மற்றும் பஸ்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல் அனைத்து துறை அதிகாரிகளும் நேரடியாக களத்துக்கு சென்று பணியாற்ற வேண்டும். அப்போது தான் மக்களுடைய பிரச்சினைகளை அறிந்து நிரந்தர தீர்வு காண முடியும்.

கடந்த 2 ஆண்டுகளில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பலத்த மழை பெய்தாலும் வெள்ளம் வராமல் தடுக்கப்படும். புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 406 குளங்கள், நீர்நிலைகளுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளோம். மொத்தமாக 804 கி.மீ. தூரத்துக்கு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் 70 கி.மீ., தூரத்திற்கு 11 வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு இருக்கிறது.

இந்த பணிகளை பொதுப் பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பல்நோக்கு பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்களிப்போடு செய்துள்ளோம். அரசு பணமின்றி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தின் உதவியோடு இதனை செய்திருக்கிறோம். ஏராளமான மரங்கள் நடப்பட்டு உள்ளன.

நீர் நிலைகளில் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விருது வழங்கப்படுகிறது. இதற்கான விழாவுக்கு தலைமை செயலர் அஸ்வனிகுமார் தலைமை தாங்குகிறார். புதுச்சேரி கலெக்டர் அருண், காரைக்கால் கலெக்டர் விக்ராந்த் ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். சிறப்பு விருந்தினராக மத்திய பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் தென்மண்டல இயக்குனர் பாட் கலந்து கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story