மருந்தகத்தை திறக்க கோரி கோட்டூரில், கால்நடைகளுடன் விவசாயிகள் தர்ணா


மருந்தகத்தை திறக்க கோரி கோட்டூரில், கால்நடைகளுடன் விவசாயிகள் தர்ணா
x
தினத்தந்தி 5 Nov 2019 4:15 AM IST (Updated: 4 Nov 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை மருந்தகத்தை திறக்க கோரி கோட்டூரில், கால்நடைகளுடன் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கால்நடை மருந்தகம் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இந்த கால்நடை மருந்தகத்தில் காடுவாகுடி, செல்லப்பிள்ளையார்கோட்டகம், அழகிரி கோட்டகம், பள்ளிசந்தம், கருப்புக்கிளார், திருப்பத்தூர், கோமாளப்பேட்டை, மேலபனையூர், கீழ மருதூர்தோட்டம், சோழங்கநல்லூர், நெம்மேலி, ஓவர்ச்சேரி, நெருஞ்சனக்குடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 30 நாட்களாக எந்த முன் அறிவிப்பும் இன்றி இந்த கால்நடை மருந்தகம் பூட்டி கிடக்கிறது. இதனால் சுற்று வட்டார பகுதியில் இருந்து நீண்ட தூரம் கால்நடைகளுடன் நடந்து மருந்தகத்துக்கு வரும் மக்கள் மருந்தகம் பூட்டி கிடப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

தர்ணா போராட்டம்

இந்தநிலையில் நேற்று கால்நடை மருந்தகத்துக்கு கால் நடைகளுடன் சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வந்தனர். அப்போது கால்நடை மருந்தகம் பூட்டி கிடந்தது. இதனால் ஆத்திர மடைந்த விவசாயிகள் மருந்தகத்தை திறக்க கோரி தங்கள் கால்நடைகளுடன் மருந்தகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடங்கி சுமார் 1 மணி நேரம் கடந்த பிறகும் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். 

Next Story