அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 6:42 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ரத்னாவிடம் மனு அளித்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார். இதில் எருத்துக்காரன்பட்டி திருவள்ளுவர் தெரு மக்கள் அளித்த மனுவில், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி திருவள்ளுவர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அடிப்படை வசதிகளான சாக்கடை அமைப்புகள் இல்லாததால் அங்கு தேங்கி நிற்கும் நீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. தேங்கிக் கிடக்கும் குப்பைகள், கழிவுநீர்கள் அகற்றப்படாததால் சில நாட்களுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர். எனவே மாவட்ட கலெக்டர், உடனடியாக மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகள், சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறையாக கழிவுநீர் செல்லும் வகையில் வசதி செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

மருத்துவ செலவுக்கு...

இதேபோல் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பூவந்தி கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி. கூலி தொழிலாளியான இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி மாடியிலிருந்து கீழே விழுந்த இவரது மகன் ரூபனை கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு ரூபனுக்கு எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் சிறுவனுக்கு கால்வலி அதிகமாகவே அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது அங்கு அவருக்கு எலும்பு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே சிறுவனின் சிகிச்சைக்காக பல லட்ச ரூபாய் செலவு செய்த நிலையில், கையில் பணம் இல்லாமல் பெற்றோர்கள் தவித்தனர். பின்னர் சிகிச்சைகாக சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனின் வலது கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் ரூபனின் பெற்றோர் மிகுந்த மன வேதனையுடன் மாவட்ட கலெக்டரை சந்தித்து தனது மகனின் மருத்துவ செலவுக்கு உதவி செய்யுமாறு மனு அளித்தனர். தனது மகனுக்கு முறையாக சிகிச்சை வழங்காத கும்பகோணம் தனியார் மருத்துவமனை மீது விரைவில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மது விற்பனை

திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் கொடுத்த மனுவில், குருவாடி கிராமத்தில் ஏலாக்குறிச்சியில் இருந்து தூத்தூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு குடிசையில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அந்த குடிசையின் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, ஊராட்சி அலுவலகம், கோவில்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி உள்ளிட்டவை இயங்கி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகே உள்ள பள்ளி வளாகங்களில் சென்று மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை உடைத்தும், குப்பைகளை வீசி சென்றும் வருகின்றனர். எனவே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்து முன்னணியினர் வேப்பிலைகளை மாலையாக அணிந்து கொண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், கோவில் பராமரிப்பு மற்றும் சுவாமிகளுக்கு பூஜை உள்ளிட்ட செலவுகளுக்காக முன்னோர்கள் சுவாமி பெயரில் நிலத்தை கொடுத்தார்கள். இந்த நிலத்தின் மூலம் கிடைக்கூடிய வருவாய்களை கொண்டு மேற்கண்டவற்றிற்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா வழங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த முடிவு பக்தர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசாணையை உடனடியாக ரத்துசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலருக்கு உத்தரவு

பொதுமக்கள் அளித்த மனுக்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை வழங்குமாறு கலெக்டர் ரத்னா அறிவுறுத்தினார். மேலும் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று அந்த மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story