கொடைக்கானல் ஏரியில் படகுகள் இயக்க தடை மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கொடைக்கானல் ஏரியில் படகுகள் இயக்க தடை மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 6 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் ஏரியில் படகுகள் இயக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டதுடன், டிக்கெட் வழங்கும் அறையை மூடவும் உத்தரவு பிறப்பித்தது.

மதுரை,

கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “கொடைக்கானலின் மையப்பகுதியில் இயற்கை தந்த வரமாக ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, முற்றிலும் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமானது. இந்த ஏரி அமைந்துள்ள பகுதியில், ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் தனியார் கிளப்பிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிளப் அதிக இடத்தை ஆக்கிரமித்து உள்ளது. அங்கு படகு குழாம், கடைகள், கழிப்பறை போன்றவற்றை கட்டி வணிக நோக்கில் பயன்படுத்தி வருகிறது. மேலும் இந்த படகு குழாமுக்கான குத்தகை ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதியுடன் முடிந்தது. ஆனால் சட்டவிரோதமாக தற்போதும் படகு குழாம் செயல்பட்டு வருகிறது.

வருவாய் இழப்பு

அங்கு 150-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதேபோல் ஏரி அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் நிர்வாகமும், ஏரியை வணிக நோக்கில் பயன்படுத்தி வருகிறது. இவற்றை தடுக்க வேண்டும். மேலும் படகு குழாம் மூலம் வரும் வருவாய் அரசுக்கு சேரும் வகையில் பொது ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தடை

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், கொடைக்கானல் ஏரியில் உள்ள கிளப்புக்கு ’சீல்’ வைக்க வேண்டும். படகுகள் இயக்க தடை விதிக்கப்படுவதால் கிளப்புக்கு சொந்தமான படகுகள் அனைத்தையும் ஏரியின் ஓரத்தில் பூட்டி வைக்க வேண்டும். படகு குழாம் டிக்கெட் வழங்கும் அறையை மூட வேண்டும். இந்த வழக்கு குறித்து கொடைக்கானல் நகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story