மோதிய வேகத்தில் நிலைதடுமாறியது, பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி; மொபட்டில் சென்றவரும் சாவு
உசிலம்பட்டி அருகே மொபட் மீது மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் மற்றும் மொபட்டில் சென்றவரும் பரிதாபமாக இறந்தனர்.
உசிலம்பட்டி,
மதுரையில் இருந்து தேனிக்கு நேற்று தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை எழுமலை சாணர்பட்டியை சேர்ந்த சங்கரன்(வயது 40) என்பவர் ஓட்டினார்.
இந்த பஸ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழபுதூர் பகுதியில் சென்று ெகாண்டிருந்தது. அப்போது பஸ்சுக்கு முன்னால் 2 பேர் தனித்தனி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த 2 மொபட்டுகள் மீதும் மோதியது. இதில் பஸ் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது.
பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் சங்கரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் இருந்த 40 பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.
பஸ் மோதியதில் மொபட்டில் சென்று கொண்டிருந்த உசிலம்பட்டி பெரியசாமி நாடார் தெருவை சேர்ந்த ராஜபாண்டி(50) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் உசிலம்பட்டி வி.கே.எஸ். தெருவை சேர்ந்த விக்னேஷ் பாண்டியன்(35) படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story