கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது ரத்த சோறு சாப்பிட்டு பெண் பக்தர்கள் வழிபாடு


கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது ரத்த சோறு சாப்பிட்டு பெண் பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 7 Nov 2019 10:45 PM GMT (Updated: 7 Nov 2019 8:36 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது. பெண் பக்தர்கள் ரத்த சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 மலை கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபடுவார்கள்.

2 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் சிகர நிகழ்ச்சியாக, அரவான் கடபலி நடந்தது. அப்போது அங்கு சாமி நிலைக்கு அருகே நின்றிருந்த திருநங்கைகள் தாலியை அறுத்து கண்ணீர் விட்டு அழுதனர். இதையடுத்து அரவான் கடபலி நிறைவு பெற்றது.

பின்னர் கூத்தாண்டவர் சாமந்தி பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு சாமந்தி பூ சூறை விடப்பட்டு வழங்கப்பட்டது.

இந்த பூவை தங்கள் நிலத்தில் கொண்டு சென்று போட்டால் பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் அந்த பூக்களை பெற ஆர்வம் காட்டினர்.

ரத்த சோறு சாப்பிட்ட பெண்கள்

இந்த விழாவின் மற்றொரு சிறப்பாக பெண் பக்தர்கள் ரத்த சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆட்டுக்குட்டியின் ரத்தம் கலக்கப்பட்ட சோறு தயாரிக்கப் பட்டது.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேண்டுதல் நிறைவேறியவர்கள் என பெண் பக்தர்கள் ரத்த சோற்றை மடிப்பிச்சையாக பெற்று அங்கேயே உண்டனர். இதில் நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். ரத்தச்சோறு சாப்பிடும் பெண் பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகமாக நம்புகிறார்கள். இதனால் இங்கு ரத்த சோற்றை பெண் பக்தர்கள் பயபக்தி யுடன் சாப்பிட்டனர்.

Next Story