கோவில் நிலங்களை தனியாருக்கு விற்க எதிர்ப்பு - திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கோவில் நிலங்களை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணியின் கோட்டச்செயலாளர் சத்தியஜி தலைமையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் வினோத்கண்ணா, மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ், மாவட்ட செயலாளர் ரகுநாதன் என திரளான இந்து முன்னணி நிர்வாகிகள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பழமையான கோவில்கள் உள்ளது. இந்த கோவில் நிலங்கள் கோவில் பராமரிப்பு, பூஜை போன்றவற்றுக்காக முன்னோர்களால் கோவிலுக்கு வழங்கப்பட்டது.
இவை அனைத்தும் கோவிலுக்கு சொந்தமான சொத்தாகும். அரசுக்கு சொந்தமானது அல்ல. சமீபத்தில் தமிழக அரசு கோவில் நிலங்களை அனுபவித்து வருபவர்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் தற்போது கோர்ட்டில் நடைபெற்று வரும் ஒரு வழக்குக்காக தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலப்பத்திரத்திலும் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பக்தர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story