இன்று மிலாது நபி பண்டிகை: கவர்னர், தலைவர்கள் வாழ்த்து


இன்று மிலாது நபி பண்டிகை: கவர்னர், தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Nov 2019 10:45 PM GMT (Updated: 9 Nov 2019 9:49 PM GMT)

இன்று மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி கவர்னர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தாளை இன்று இஸ்லாமியர்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள். இதனை முன்னிட்டு புதுவை தலைவர்கள் வாழ்த்து செய்தி விடுத்துள்ளனர்.

கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அன்பு, சேவை, மனித நேயம் ஆகியவற்றை போதித்த முகமது நபியின் பிறந்தநாளை இன்று மிலாது நபியாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை இஸ்லாமிய சகோதரர்களுக்கும் புதுவை மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

அமைச்சர் நமச்சிவாயம்

புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

எல்லா தரப்பு மக்களும் இன்புற்று வாழ அல்லாவின் போதனைகளை அகிலத்துக்கு அறிய செய்த இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபியாக இஸ்லாமிய சகோதரர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அன்பு, கருணை, பாசம், நேசம் பரிவு கொண்டு மத பேதமின்றி மக்கள் வாழ நபிகள் நாயகத்தின் போதனைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

செல்வம் படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து அவர்களின் சிரிப்பில் இறைவனை காணும் உன்னத மாண்பினை நபிகள் நாயகம் தனது மார்க்கத்தின் மூலம் நமக்கு அருளி உள்ளார். நபிகள் நாயகத்தின் நன்னெறிகள் மனித சமுதாயம் மகிழ்ச்சியுடன் வாழவும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக திகழவும் ஈகை பண்பினை அறிந்துகொள்ளவும் நமக்கு வழிகாட்டியாய் விளங்குகிறது. எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் நபிகள் நாயகத்தின் புகழினை போற்றி வணங்குவோம் அவரின் போதனைகளை நெஞ்சில் ஏந்தி இன்பமயமான வாழ்க்கைக்கு அடித்தளம் இடுவோம். இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்தியில் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

அன்பழகன் எம்.எல்.ஏ.

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உத்தம நபியின் உதய தின நாளான மிலாது நபி விழாவினை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் அ.தி.மு.க. சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இஸ்லாமியர்களின் இறை வேதமான குரானில் கூறப்பட்ட வாழ்வியல் தத்துவங்களை முன்னுதாரணமாக வாழ்ந்து பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர், உலகில் அமைதியும், சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் போதித்தவர், ஏழ்மையிலும், வறுமையிலும் வாடுவோருக்கும் உதவிகள் செய்யும் நற்பண்புகள் கொண்டவர் நபிகள் நாயகம்.

அவரின் பிறந்தநாள் கடந்த காலங்களில் மத நல்லிணக்க நாளாக கொண்டாடப்பட்ட சூழ்நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசானது இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்யும் விதத்தில் மத நல்லிணக்க விழாவை கொண்டாடாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுபான்மை முஸ்லீம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் சிறுமைப்படுத்தும் காங்கிரஸ் அரசின் செயலை மத நல்லிணக்கத்தில் அக்கறை கொண்ட அனைவரும் கண்டிக்கவேண்டும் என்று இந்நாளில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story