ஆவடியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு காய்கனி வணிக வளாகம் திறப்பு

ஆவடியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு காய்கனி வணிக வளாகம் திறக்கப்பட்டது. அமைச்சர் பாண்டியராஜன், பொருட்களை வாங்கி வியாபாரத்தை தொடங்கி வைத்தார்.
ஆவடி,
ஆவடி புதிய ராணுவ சாலையில், சாலையோர வியாபாரிகளுக்காக 2012-ம் ஆண்டு ரூ.62 லட்சத்தில் 68 கடைகள் கொண்ட காய்கனி வணிக வளாகம் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் வணிகவளாகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததால் புதர் மண்டி பாழடைந்து கிடந்தது. இதனால் ஆவடி மாநகராட்சிக்கு கோடிக் கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் சமீபத்தில் காய்கனி வணிக வளாகத்தில் உள்ள 68 கடைகளுக்கும் ஏலம் விடப்பட்டது. இதையடுத்து வணிக வளாகம் உள்ள இடத்துக்கு எதிரே இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
மேலும் பாழடைந்து கிடந்த வணிக வளாகம் சுத்தம் செய்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
மொத்தம் உள்ள 68 கடைகளில் சில கடைகளில் தரையில் ‘டைல்ஸ்’ பதிக்கும் பணிகள் பூர்த்தி செய்யாமல் உள்ளது. கடையை ஏலம் எடுத்த சிலர் நேற்றே கடைகளில் பூண்டு, தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர்.
அமைச்சர் பாண்டியராஜன் காய்கனி வணிக வளாக கடைகளில் வியாபாரிகளிடம் பணம் கொடுத்து தக்காளி, புளி உள்ளிட்டவைகளை வாங்கி வியாபாரத்தை தொடங்கி வைத்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், ஆவடி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், ஆவடி நகர செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story