மன்சூர்கானிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 3 அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு
மன்சூர்கானிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட அரசு அதிகாரிகள் 3 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு சிவாஜிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர் ஐ.எம்.ஏ. என்ற நிறுவனம் நடத்தி அதன்கீழ் பல்வேறு தொழில்களை செய்து வந்தார். இந்த நிலையில் மன்சூர்கான் தனது நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்களின் ரூ.1,650 கோடி மோசடி செய்தார். இதுதொடர்பாக கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறப்பு விசாரணை குழு மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி துபாயில் இருந்து டெல்லி வந்த மன்சூர்கானை கைது செய்தனர்.
வழக்கு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர், பெங்களூரு வடக்கு மண்டல துணை கமிஷனர் நாகராஜ், கிராம கணக்காளர் மஞ்சுநாத் மற்றும் நிறுவனத்தில் அங்கம் வகிப்பவர்கள் என்று மொத்தம் 20-க்கும் அதிகமானவர்களை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். இதையடுத்து விஜய் சங்கர், நாகராஜ், மஞ்சுநாத் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிறப்பு விசாரணை குழுவினர் மன்சூர்கானின் நிறுவனங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமல்லாமல் மன்சூர்கானின் வங்கி கணக்குகளையும் முடக்கினர்.
இதற்கிடையே, வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 8-ந் தேதி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மன்சூர்கானுக்கு சாதகமாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய் சங்கர், போலீஸ் ஐ.ஜி. ஹேமந்த் நிம்பால்கர், ஐ.பி.எஸ். அதிகாரிகளான அஜய் ஹிலோரி, ஸ்ரீதர், பெங்களூரு வடக்கு மண்டல துணை கமிஷனர் நாகராஜ், கிராம கணக்காளர் மஞ்சுநாத் உள்பட 9 பேரின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.
இந்த நிலையில் மன்சூர்கானின் நிறுவனம் சார்பில் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்க அனுமதி கொடுக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய் சங்கர் ரூ.1.50 கோடியும், மன்சூர்கான் நிறுவனத்துக்கு ஆதரவாக அரசிடம் அறிக்கை வழங்க பெங்களூரு வடக்கு மண்டல துணை கமிஷனர் நாகராஜ் ரூ.4 கோடியும் லஞ்சம் பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் கிராம கணக்காளர் மஞ்சுநாத் ரூ.8 லட்சம் பெற்று இருந்ததோடு, அவர் மூலமாக தான் விஜய் சங்கர், நாகராஜ் ஆகியோருக்கு பணம் கைமாறியதும் தெரியவந்தது. இதன் காரணமாக விஜய் சங்கர், நாகராஜ், மஞ்சுநாத் ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story