கூனிச்சம்பட்டு கிராமத்தில் தாமரை குளம் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


கூனிச்சம்பட்டு கிராமத்தில் தாமரை குளம் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:45 PM GMT (Updated: 10 Nov 2019 10:35 PM GMT)

கூனிச்சம்பட்டு கிராமத்தில் தாமரை குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தொடங்கிவைத்தார்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், பூதநாதீஸ்வரர் கோவில் தாமரை குளம் உள்ளது. இந்த குளம் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண், டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் குளம் தூர்வாரும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தனர்.

இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தூர்வாரும் பணியை தொடங்கிவைத்த இடிதாங்கி குளத்தை கலெக்டர் அருண் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்ததற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

கிராம மக்கள் கோரிக்கை

இந்த ஆய்வின்போது, கூனிச்சம்பட்டு கிராம மக்கள், ஏரியில் இருந்து தாமரை குளத்துக்கு வரும் வாய்க்காலை தூர்வாரவேண்டும், குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தும் வகையில் உள்ள பயன்பாடற்ற குடிநீர் தொட்டி மற்றும் பாழடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் ஏரிக்கு சென்ற கலெக்டர் அருண், வரத்து வாய்க்காலை தூர்வாரி சீரமைக்கவும், பழைய குடிநீர் தொட்டி, கட்டிடத்தை இடித்து அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடனே பழைய கட்டிடம் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது. குடிநீர் தொட்டியை பாதுகாப்பாக இடித்துத்தள்ள கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story