மாடு மேய்ந்ததால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் சாலை மறியல்


மாடு மேய்ந்ததால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 7:16 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி அருகே மாடு மேய்ந்ததால் நெல் வயல்கள் சேதம் அடைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகள் முடிவடைந்து பயிர்கள் நல்ல நிலையில் வளர்ந்துள்ளன. இந்த நிலையில் வயல்களில் மாடுகள் மேய்ந்ததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்து காணப் படுகின்றன. இதுகுறித்து மாடுகளின் உரிமையாளர்களிடம் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ஆனால் மாடு உரிமையாளர்கள் மாடுகளை உரிய இடத்தில் கட்டி வைக்கவில்லை என தெரிகிறது.

இதனால் மாடுகள் வயல் களில் தொடர்ந்து மேய்ந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்த வயல்களில் மாடுகள் மேய்வதை தடுக்கக்கோரி செய்யாமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, தோகூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அங்கு 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story