கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்


கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Nov 2019 11:00 PM GMT (Updated: 13 Nov 2019 7:23 PM GMT)

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலின் ரசாயனம் தூவி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை, 

இயற்கைக்கு மாறாக செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள் உடல்நலனுக்கு கேடுவிளைவிக்க கூடியவை. அந்தவகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழ சந்தையில் வாழைப்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை (சென்னை) நியமன அதிகாரி ஏ.ராமகிருஷ்ணன் தலைமையில் ஏ.சதாசிவம், சண்முகசுந்தரம், ராமராஜன் உள்பட அதிகாரிகள் குழு, கோயம்பேடு பழ மார்க்கெட்டில் வாழைப்பழ கடைகள் மற்றும் கிடங்குகளில் நேற்று அதிகாலை அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் பறிமுதல்

இந்த சோதனையில் 3 கடைகளில் எத்திலின் ரசாயனம் (ஸ்பிரே) தூவப்பட்டு செயற்கை முறையில் வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைப்பழங்களை (ரூ.4 லட்சம் மதிப்புடையவை) அதிகாரிகள் கைப்பற்றினர். உடனடியாக அந்த வாழைப்பழங்கள், மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி-பழ கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், பழுக்கவைக்க பயன்படுத்தப்பட்ட ரசாயன பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

‘சீல்’ வைக்க பரிந்துரை

செயற்கை முறையில் வாழைப்பழங்களை பழுக்க வைத்த கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கடைகளை ‘சீல்’ வைக்கவும் மார்க்கெட் நிர்வாக குழுவுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர் ஆய்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த புகார்களை 9444042322 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு அனுப்பலாம்”, என்றனர்.

Next Story