4-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன்கடை பணியாளர்கள் மறியல் - 16 பெண்கள் உள்பட 68 பேர் கைது


4-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன்கடை பணியாளர்கள் மறியல் - 16 பெண்கள் உள்பட 68 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2019 10:30 PM GMT (Updated: 14 Nov 2019 8:20 PM GMT)

4-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன்கடை பணியாளர்கள் தஞ்சையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 16 பெண்கள் உள்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழக ரேஷன்கடை பணியாளர்கள் கடந்த 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக இந்த வேலை நிறுத்தப்போராட்டம் நீடித்தது. நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை கூட்டுறவுத்துறை ரேசன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்ய வேண்டும். ரேஷன் பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

பணியாளர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீட்டு தொகை, வருங்கால வைப்பு நிதி, கடனுக்கு செலுத்திய தொகை ஆகியவற்றை சரியாக வரவு-செலவு செய்யாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரிசாலையில் உள்ள கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராமச்சந்திரன், இணை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராமலிங்கம், வட்டார தலைவர் அறிவழகன், மாவட்ட இணை செயலாளர் சுந்தரேசன், சகாயஅமிர்தம், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தரும.கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரெங்கசாமி, சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Next Story