கோவில்பட்டியில் 1,043 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் 1,043 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 16 Nov 2019 10:30 PM GMT (Updated: 16 Nov 2019 6:51 PM GMT)

கோவில்பட்டியில் 1,043 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் 1,043 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் முதல்-அமைச் சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கோவில்பட்டி, கயத்தாறு தாலுகாக்களைச் சேர்ந்த 1,043 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வருவாய்த்துறை சார்பில் 359 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 631 பேருக்கு முதியோர் மற்றும் இதர ஓய்வூதியமும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 32 பயனாளிகளுக்கு இலவச ஆடு, பசு மாடு, கன்றுகளும், வேளாண்மை துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு உரம், விசைத்தெளிப்பான் கருவியும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.53 லட்சம் கடன் உதவியும் வழங்கப்பட்டது.

புதிய வழித்தடத்தில் பஸ் சேவை

பின்னர் தாய்சேய் நல வாகனம், கால்நடை ஆம்புலன்ஸ் சேவை வாகனம் ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திருவேங்கடம் வழியாக செவல்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அ.ம.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நகரசபை துணை தலைவர் ராமர், முன்னாள் நகரசபை கவுன்சிலர்கள் பத்மாவதி, சுந்தரி, ராஜலட்சுமி, விமலாதேவி உள்ளிட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில், அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, யூனியன் ஆணையாளர்கள் கிரி, மாணிக்கவாசகம், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story