காட்ரம்பாக்கம் ஊராட்சியில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை


காட்ரம்பாக்கம் ஊராட்சியில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Nov 2019 10:30 PM GMT (Updated: 16 Nov 2019 7:27 PM GMT)

காட்ரம்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட காட்ரம்பாக்கம் ஊராட்சியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. போதிய குப்பை தொட்டிகள் இல்லாமல் உள்ளதால் குப்பைகள் சாலையோரத்தில் அப்படியே கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

அந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் என தனித்தனியாக சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்குகளில் தனியாக வைக்கப்பட்டு பின்னர் மக்காத குப்பைகள் அழிக்கப்பட வேண்டும். ஆனால் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரிப்பதற்கு கட்டப்பட்ட தொட்டிகளில் குப்பைகளை முறையாக சேகரிக்காமல் குப்பைகள் தொட்டியின் வெளியே கொட்டி கிடக்கிறது. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தாத நிலையே ஊராட்சியில் உள்ளது.

மேலும் அந்த பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் சாலையோரங்களில் அதிகப்படியான குப்பை தொட்டிகளை அமைத்து தரவும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story