அகில இந்திய கூட்டுறவு வார விழா 2,780 பேருக்கு ரூ.8¾ கோடி நலத்திட்ட உதவி அமைச்சர் துரைக்கண்ணு - வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினர்


அகில இந்திய கூட்டுறவு வார விழா 2,780 பேருக்கு ரூ.8¾ கோடி நலத்திட்ட உதவி அமைச்சர் துரைக்கண்ணு - வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினர்
x
தினத்தந்தி 16 Nov 2019 11:37 PM GMT (Updated: 16 Nov 2019 11:37 PM GMT)

அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் 2,780 பேருக்கு ரூ.8¾ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவியை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

தஞ்சாவூர்,

அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் 2,780 பேருக்கு ரூ.8¾ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவியை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

கூட்டுறவு வார விழா

தஞ்சை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் அகில இந்திய கூட்டுறவு வார விழா தஞ்சையில் நேற்று மாலை நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் திட்டங்களை விளக்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் வரவேற்றார்.

விழாவில் 2,780 பேருக்கு ரூ.8 கோடியே 82 லட்சத்து 83 ஆயிரத்து 800 மதிப்பில் கடன்உதவி, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

ஜெயலலிதா காரணம்

பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. பேசும்போது, இயற்கை சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படுவதால் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை விவசாயிகளால் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கடன் தள்ளுபடி செய்யப்படும் என கருதி திரும்ப செலுத்தாமல் இருந்து விடுகின்றனர். ரிசர்வ் வங்கி கொடுக்கும் நெருக்கடியால் கூட்டுறவு வங்கிகள் தகுதியை இழக்கிறது.

தஞ்சை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் ஒரு காலத்தில் சிறந்து விளங்கியது. பெற்ற கடனை திரும்ப விவசாயிகள் செலுத்தாததால் நலிவுற்று கடன் கொடுக்கக்கூடிய சக்தியை கூட இழந்தது. “சி” நிலையில் இருந்த வங்கிகள் “பி” நிலைக்கு வந்து இருக்கிறது. விரைவில் “ஏ” தகுதியை பெறும்.

கூட்டுறவு வங்கிகள் எல்லாம் சிறப்பாக செயல்படுவதற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் காரணம். விவசாயிகள், சிறுவியாபாரிகள், தொழிலாளர்கள், சுயஉதவிக்குழுவினர், விவசாய தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன், நகைக்கடனை தமிழகஅரசு வழங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சி பெற அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார்.

பயிர்க்கடன்

அமைச்சர் துரைக்கண்ணு பேசும்போது, தஞ்சை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் 30 கிளைகளுடன் இணைக்கப்பட்ட 243 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை உரிய காலத்தில் திரும்ப செலுத்தினால் அதற்கான வட்டியை அரசே ஏற்கிறது.

நடப்பு ஆண்டு பயிர்க்கடன் இலக்காக ரூ.311 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.120 கோடியே 51 லட்சமும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.70 கோடியே 37 லட்சமும் என மொத்தம் ரூ.190 கோடியே 88 லட்சம் கடன் 26 ஆயிரத்து 464 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தாய்

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைநிமிர செய்து வருகிறார். விவசாயிகளின் தாயாக கூட்டுறவு துறை செயல்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் ‘கைபேசி வங்கி செயலியை’ அறிமுகப்படுத்தினர்.

இதில் முன்னாள் எம்.பி. பரசுராமன், மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தி.மனோகரன், இணைப்பதிவாளர் எஸ்.மனோகரன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் சரவணன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், துணைத் தலைவர் ரமேஷ், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் துணைப் பதிவாளர் முருகன் நன்றி கூறினார்.

Next Story