கலசபாக்கம் அரசு பள்ளியில் சிவில் சர்வீஸ், நீட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


கலசபாக்கம் அரசு பள்ளியில் சிவில் சர்வீஸ், நீட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:30 PM GMT (Updated: 17 Nov 2019 3:23 PM GMT)

கலசபாக்கம் அரசு பள்ளியில் சிவில் சர்வீஸ், நீட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கலசபாக்கம், 

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் பட்டம் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கப்பட்டு உள்ளன.

பயிற்சி முகாம் தொடக்க விழாவிற்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

முன்பெல்லாம் பட்டம் படித்து முடித்து இருந்தால் வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 17 ஆண்டுகள் படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பது தான் கடமை, வேலை வாங்குவது மாணவர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் செல்லும் பாதைக்கு வழி காட்டியாக நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பயிற்சிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் கையேடுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலசபாக்கம் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, அ.தி.மு.க. மாவட்ட தொழிற் சங்க செயலாளர் துரை, தொழிலதிபர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story