விருதம்பட்டில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய வாலிபர் கைது - ரவுடி ஜானிக்கு வலைவீச்சு


விருதம்பட்டில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய வாலிபர் கைது - ரவுடி ஜானிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Nov 2019 10:15 PM GMT (Updated: 17 Nov 2019 4:25 PM GMT)

விருதம்பட்டில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான ரவுடி ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காட்பாடி, 

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கிரிதரன் (வயது 42), தொழிலதிபர். இவரை கடந்த 3-ந் தேதி ரவுடி ஜானி செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர் பணம் கொடுக்காததால் மீண்டும் கடந்த 9-ந் தேதி பணம் கேட்டு ஜானி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கிரிதரன் விருதம்பட்டு பாலாறு அருகே மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது ரவுடி ஜானி மற்றும் அவரது கூட்டாளி சீனி என்ற சீனிவாசன் (26) ஆகியோர் அங்கு காரில் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி கிரிதரனை மிரட்டி காரில் கடத்தி பாலாற்றுக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரை சரமாரியாக இருவரும் தாக்கி உள்ளனர். பின்னர் கிரிதரன் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்து விட்டு, வீட்டிற்கு போன் செய்து ரூ.10 லட்சத்தை கொண்டு வரச்சொல்லி அடித்து உதைத்தனர்.

வீட்டிற்கு போன் செய்து பணத்தை கொண்டுவர சொல்வதாக கூறிய கிரிதரன் திடீரென அங்கிருந்து தப்பி பொதுமக்கள் கூடியிருந்த விருதம்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். ஜானி மற்றும் கூட்டாளி பின்தொடர்ந்து வருகிறார்களா? என்று சிறிதுநேரம் பார்த்துவிட்டு பின்னர் அவர் விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் உடனடியாக பாலாற்றுக்கு சென்று பார்த்தனர். ஆனால் அதற்குள் ஜானியும், கூட்டாளியும் அங்கிருந்து சென்று விட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதைத்தொடர்ந்து ஜானியின் கூட்டாளி காட்பாடி பாரதிநகரை சேர்ந்த சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். சீனிவாசன் மீது காட்பாடி, விரிஞ்சிபுரம், விருதம்பட்டு ஆகிய போலீஸ் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான ரவுடி ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story