தாண்டிக்குடி அருகே, வனத்துறையினர், விவசாயிகளை விரட்டிய காட்டு யானைகள் - வனக்காவலர் உள்பட 7 பேர் காயம்


தாண்டிக்குடி அருகே, வனத்துறையினர், விவசாயிகளை விரட்டிய காட்டு யானைகள் - வனக்காவலர் உள்பட 7 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:15 PM GMT (Updated: 18 Nov 2019 5:37 PM GMT)

தாண்டிக்குடி அருகே வனத்துறையினர், விவசாயிகளை காட்டு யானைகள் விரட்டியதில் தடுமாறி விழுந்ததில் வனக்காவலர் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

பெரும்பாறை, 

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, பெருங் கானல், கவுச்சிகொம்பு, சேம்படிஊத்து, ஆடலூர் உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை தண்ணீர், உணவு தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், தோட்டங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

குறிப்பாக காட்டுயானைகள் தோட்டங்களில் அமைக் கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலிகளை உடைத்து கொண்டு அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள காபி, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பொதுமக்களும் காட்டுயானைகளின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும்பாறை அருகே உள்ள நல்லூர்காடு பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் காட்டுயானை தாக்கி இறந்தார்.

இதையடுத்து பெரும்பாறை, தாண்டிக்குடி பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று தாண்டிக்குடி அருகே பெருங்கானல் பகுதியில் 2 காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனத்துறையினர் விவசாயிகளுடன் சேர்ந்து அந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பட்டாசு வெடித்தபோது, மிரண்டு போன காட்டுயானைகள் வனத் துறையினரையும், விவசாயி களையும் விரட்டின. இதனால் பதறி போன வனத்துறையினரும், விவசாயிகளும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் தவறி கீழே விழுந்ததில் வனக்காவலர் நாகராஜ் (வயது 30), வேட்டை தடுப்பு காவலர் முத்துசாமி (25) மற்றும் விவசாயிகள் ரமேஷ், முத்துப்பாண்டி, தங்கவேல், கணேசன், முத்துராமன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே காபி தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே காட்டுயானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story