பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா கலெக்டர் ரத்னா தொடங்கி வைத்தார்


பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா கலெக்டர் ரத்னா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 4:40 PM GMT)

சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை மாவட்ட கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்லும் நிகழ்ச்சி சுற்றுலாத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அரியலூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 50 மாணவ- மாணவிகளும், செந்துறை கல்வி மாவட்டத்தில் இருந்து 50 மாணவ- மாணவிகளும் மற்றும் ஜெயங்கொண்டம் கல்வி மாவட்டத்தில் இருந்து 50 மாணவ- மாணவிகளும் என நன்றாக கல்வி பயிலும் 150 மாணவ- மாணவிகளை தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் சுற்றுலாத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து அவர்களின் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சுற்றுலாவில் உலக புகழ்பெற்ற, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் பெரியக்கோவில், தஞ்சாவூர் அரண்மனை மற்றும் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில் போன்ற கலைநயமிக்க இடங்களுக்கு மாணவ- மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

மாணவர்களுக்கு பரிசு

இதில் மாணவர்களிடையே சுற்றுலாத்தளங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு வினாடி- வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், சுற்றுலாவில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சுற்றுலாத்துறையின் சார்பாக புத்தகப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பாளர்) பாலாஜி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கிரு‌‌ஷ்ணமூர்த்தி, பள்ளிக்கல்வி ஆய்வாளர் பழனிசாமி, அரியலூர் மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story