மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கரைந்து வருகிறது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கரைந்து வருகிறது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2019 11:15 PM GMT (Updated: 20 Nov 2019 9:02 PM GMT)

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கரைந்து வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

நெல்லை,

கூட்டுறவு இணையம் மூலம் தமிழகத்தில் இதுவரை 33 பெட்ரோல் பல்க் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 பெட்ரோல் பல்க் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் கூட்டுறவு வங்கிக்கு அதிக வருமானம் கிடைக்கும். இதில் கிடைக்கும் வருமானம் மூலம் மக்களுக்கு தேவையான நலத்திட்ட பணிகளை செயல்படுத்தலாம்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து செயல்படுவோம் என்று கூறி உள்ளார்கள். அவர்களால் மக்களுக்கு என்ன பயன். அவர்கள் மக்களுக்கு என்ன நன்மைகளை செய்து உள்ளார்கள். ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் முதல்-அமைச்சர் ஆவார் என்று கூறுகிறார்கள். அவர் முதலில் கட்சியை ஆரம்பித்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் சொல்ல வேண்டும். அது மக்களிடம் போய் சேர வேண்டும்.

தி.மு.க. ஆட்சியின் போது ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெளியான மறுநாளே அதன் திருட்டு சி.டி.யும் வந்தது. நடிகர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் நடிகர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. திருட்டு சி.டி. ஒழிக்கப்பட்டு உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும், ரஜினிகாந்த் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அந்த வெற்றிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் நிரப்பப்பட்டு விட்டது. ஆகவே தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது இல்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக உள்ளாட்சி தேர்தலில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி மேயர், நகராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம் என்றால் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் அவர்கள் அவ்வாறு சொல்லி வருகிறார்கள். தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தபோது அந்த கட்சி வளர்ந்து வந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வரும் தி.மு.க. கரைந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க. தலைமைக்கு மு.க.ஸ்டாலின் தகுதியற்றவர். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலுக்காக சொத்துவரி குறைக்கப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story